தமிழகம் தற்போதைய செய்திகள்

பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

சென்னை

தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும்.

இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.

சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.