தற்போதைய செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

மதுரை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி தேவர் சிலை முன்பு மேதின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உழைக்கும் தொழிலாளர்களால் பெரிதும் போற்றப்படும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். உழைப்பவரே உயர்ந்தவர் என்று தான் கையெழுத்திடுவார்.

கடந்த அம்மா ஆட்சிக் காலத்தில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த 35 லட்சம் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண உதவி மற்றும் உணவு தொகுப்புகளை எடப்பாடியார் வழங்கினார். தற்போது தி.மு.க. அரசு கொரோனா காலத்தில் தொழிலாளருக்கு எந்த நிவாரண உதவியும் வழங்க வில்லை.

தற்போது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தாமல் தி.மு.க. அரசு மெத்தனம் காட்டி வருவதால் ஆட்டோ தொழிலாளர்கள், சரக்கு ஏற்றும் வண்டி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிதாக ஆட்டோ வாங்கும் ஆட்டோ ஓட்டுனருக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று கூறினார்கள். ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை வழங்கவில்லை.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவை நனவாக்குவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும். அதனை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கே.பழனிசாமி என்று. ஆனால் தி.மு.க.வினர் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று கூறுகின்றனர்.

நான் சவால் விட்டு கூறுகிறேன். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 11 மாதத்தில் எந்த திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். இந்த திட்டத்தை கொண்டு வந்தோம் என்று உங்களால் கூற முடியுமா? முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்டு வந்த திட்டத்திற்கு நீங்கள் கல்வெட்டு வைக்கின்றனர்.

ஏற்கனவே கல்வெட்டு வைத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறினீர்கள். ரத்து செய்தீர்களா?69 சதவீத இட ஒதுக்கீட்டை தனி சட்டமாக நிறைவேற்றி சாதனை படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

மதுரையில் அம்மா உணவகத்திற்கு சென்று பார்த்தீர்கள் என்றால் அங்கு அம்மா படம் இருக்காது. இது எவ்வளவு பெரிய சாதனை. நீங்கள் மட்டும் கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். அம்மா இல்லை என்றால் யாரும் இல்லை.
7 பேர் விடுதலை, நீட் தேர்வை பற்றி கூறினீர்கள். ஒரு செங்கலை எடுத்து வந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த ஒரு வருடத்தில் எத்தனை செங்கலை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைத்துள்ளீர்கள். இதற்கு பதில் உண்டா? ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தி.மு.க. அரசு சர்வாதிகார கை விலங்குகளை கொடுக்கின்றனர். இந்த விலங்கை உடைத்து மீண்டும் ஜனநாயகம் மலர வரும் தேர்தலில் மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பாளர்கள்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.