தற்போதைய செய்திகள்

பெருமாநல்லூர் பெண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை

திருப்பூர் பெருமாநல்லூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  கேள்வி நேரத்தின்போது திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.நா.விஜயகுமார் திருப்பூர், மாநகராட்சி, குமரானந்தபுரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 1952-ம் ஆண்டு இதே இடத்தில் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். தற்போது கொரோனா நோய் தொற்றை ஒழிக்க பம்பரமாக பணியாற்றும் முதலமைச்சருக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த கூட்டத்தில் விதி 110-ன் கீழ் 50 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது திருப்பூர் பெருமாநல்லூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று உறுப்பினர் குறிப்பிட்ட பகுதி குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.