தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் அமோக ஆதரவுடன் கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை

பொதுமக்களின் அமோக ஆதரவுடன் கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஐயப்பன் கோயில் மைதானம், வாய்க்கால் பாளையம் ஆதிதிராவிடர் காலனி, கோவைபுதூர், குளத்துப்பாளையம், சத்யா நகர், நேதாஜி நகர், சுகுணாபுரம் மேற்கு, கே.புதூர் பிரிவு மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கழக ஆட்சியில் மக்களுக்கான தேவைகள் என்ன என்பதை அறிந்து அனைத்தையும் பூர்த்தி செய்து தமிழகம் வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்து கொடுத்துள்ளேன்.

தமிழகத்தில் மாபெரும் சக்தியாக திகழ்ந்து வரும் கழகம் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ஆனால் திமுக சிறுபான்மையினருக்கு எந்த உதவியும் செய்யாமல் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இந்தியாவிலேயே வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம் என்பதில் சந்தேகம் கிடையாது. கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களையும் தேடிச்சென்று தேவையான உதவிகளை செய்தது கழகம் மட்டும்தான்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், ராம செட்டிபாளையம் பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனிமேல் திமுக என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், நில அபகரிப்பு, மின்வெட்டு என அமைதியின்றி தமிழகம் தவித்தது. கழக ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

கோவை மாவட்டத்தில் மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டம், குளக்கரை மேம்பாடு, ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என திட்டங்கள் வெற்றிகரமாக பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் அமோக ஆதரவுடன் மூன்றாவது முறையாக தொடர்ந்து கழக ஆட்சி தமிழகத்தில் அமையும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, பகுதி கழக செயலாளர் வி.குலசேகரன், கழக நிர்வாகிகள் ஏ.எஸ்.மகேஸ்வரி, லட்சுமிகாந்தன் மற்றும் மாவட்ட, பகுதி, சார்பு அணி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.