தற்போதைய செய்திகள்

பொதுமக்களை நேரடியாக சந்திக்க ஸ்டாலினுக்கு தைரியம் கிடையாது – அமைச்சர் நிலோபர் கபீல் கடும் தாக்கு

வேலூர்

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களை சந்திக்க பயந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காணொலியில் காட்சி தருகிறார் என்று அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்தில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கழக துணைச்செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர்கபீல் பேசியதாவது:-

தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்த பெருமை அம்மா அவர்களையே சாரும். ஸ்டாலின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது. வரும் தேர்தலில் அவரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர். திமுகவினர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகை கடன் தள்ளுபடி, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை ஏமாற்றி வெற்றிபெற்றனர். திமுகவினர் தேர்தல் நேரத்தில் தொகுதி பக்கம் வந்தால் இரண்டு ஏக்கர் நிலம், கல்விக்கடன், நகைக்கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேளுங்கள்.

திமுகவினர் பிரியாணி தின்று விட்டு பணம் கேட்டால் கடை உரிமையாளரை அடிக்கின்றனர். அழகு நிலையத்துக்குச் சென்று பெண்களை அடிக்கின்றனர். நில அபகரிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஸ்டாலின் மக்களை சந்திக்க திராணியில்லாமல் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு ஏஜெண்டுகள் வழங்கும் பொய் அறிக்கைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார். மேலும் காணொலியில் தோன்றி உரையாடுகிறார்.
அம்மாவின் ஆட்சி தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவு தரும் அரசாக விளங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.