தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்

முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுக்கோட்டை,

விராலிமலை, இலுப்பூரில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ததோடு, தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூரில் கடந்த 8 நாட்களாக கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். அதன்படி இலுப்பூர், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விராலிமலையில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இலுப்பூரில் நடைபெற்ற முகாமிலும் ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார். மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு என் 95 முகக் கவசங்களை இலவசமாக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மக்களுக்கு சேவை செய்து வரும் உங்களின் பணி பாராட்டுக்குரியது. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.