தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்துகளில் பயணம் மேற்கொள்கிறார்களா என கண்காணிக்க வேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

கோவை

பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து பேருந்துகளில் பயணம் மேற்கொள்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட முகாம் அலுவலகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சிறப்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து வருவதால், விரைவாக குணமடைந்து வருகிறார்கள். சிகிச்சைக்குபின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் அதிகமாகவும், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக்குறைவாகவும் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதுடன், தேவையான தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தி வருகிறார். அதன்படி, தற்போது பொது போக்குவரத்து மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர், மற்றும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பயணிகள் ஏறுவதற்கு ஒரு வழியும், இறங்குவதற்கு ஒரு வழியும் பயன்படுத்துவதையும், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் மேற்கொள்வதையும், கண்காணித்திட வேண்டும்.

மேலும், பிற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களும் தங்கள் பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு குறையின்றி தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகளை வெளியிடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், வீடுகள்தோறும் ஆய்வு மேற்கொள்ளுதல், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம், மருத்துவர்கள் பணியாளர்கள் போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்தல், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருத்தல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு போன்ற பணிகளை, மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கோயம்புத்தூர் மாநகர பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து அவர்களிடமிருந்து பிறருக்கு தொற்று பரவாமல் அவர்களை விரைவாக தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட குழு அமைக்க வேண்டும்.

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,தனியார் மருத்துவமனைகள், கோவிட் கேர் மையங்கள் ஆகியவற்றில் தேவைகளின் அடிப்படையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தற்போது, தினந்தோறும் சுமார் 6,000க்கும் மேற்பட்ட நபர்கள் வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தினந்தோறும் மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் அந்தந்தப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையற்ற அச்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 338 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 15,490 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 11,726 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு நோய் தொடர்பிலிருந்த 308 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது 372 நபர்கள் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 150 நபர்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், 83 நபர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், 57 நபர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும், 35 நபர்கள் மதுக்கரை அரசு மருத்துவமனையிலும், 968 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கொடிசியா சிகிச்சை மையத்தில் 1,082 நபர்களும், அன்னூர் சசூரி கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் 44 நபர்களும், மத்தம்பாளையம் காருண்யா கல்லூரியில் 161 நபர்களும், பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 29 நபர்களும், என்.எம். ஹோம் மருத்துவமனையில் 19 நபர்களும் என 3456 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அறிகுறியற்ற வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 456 நபர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அறிகுறியின்றி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை அந்தந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக கொடிசியா, பெரியநாயக்கன்பாளையம் கே.டி.வி.ஆர். பொறியியல் கல்லூரி, பொள்ளாச்சி பி.ஏ. கல்லூரி, மேட்டுப்பாளையம் நஞ்சை லிங்கம்மாள் திருமண மண்டபம், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மொத்தம் 6,120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களை கொரோனா தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் சிறப்பு முயற்சியாக, சித்த மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளராசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மரு.காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.