தற்போதைய செய்திகள்

பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியே நீடிக்கும் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை

பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியே நீடிக்கும். அதற்காக தீவிர களப்பாற்றி கழகத்தை வெற்றிபெற செய்வோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நேற்று கழகத்தின் 49-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம், வலையங்குளம் ஆகிய பகுதிகளில் 49 அடி உயர கம்பத்தில் கழகக் கொடியை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ஏற்றி வைத்தார். மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தபோது ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி கழக தொண்டர்கள் உழைத்தனர். 16 லட்சம் தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார்.

புரட்சித்தலைவி அம்மா கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை அரசின் சார்பில் கொண்டாடுவோம் என்று சூளுரைத்தார். அதன்படி புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கொண்டாடினர்.

தற்பொழுது கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை நாம் கொண்டாடுகிறோம். அடுத்த ஆண்டு 50-வது ஆண்டு பொன்விழா காண உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று 50-வது ஆண்டு பொன் விழாவில் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டாட வேண்டும் என்று நாம் சபதம் ஏற்க வேண்டும்.

1981, 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் நாம் ஆட்சியைப் பிடித்தோம். அதே போல் வருகிற 2021-ம் ஆண்டிலும் நாம் ஆட்சியை நிச்சயம் பிடிப்போம். கழகத் தொண்டர்கள் அனைவரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் சாதனைகளை மக்களிடம் இன்று முதல் எடுத்துச்சென்று சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அயராது நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.