போதைபொருள் நடமாட்டத்தை தடுக்க தவறி விட்டது விடியா தி.மு.க. அரசு

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு
மதுரை
எடப்பாடியார் அன்றே சட்டமன்றத்தில் பேசிய போது சுட்டிக்காட்டினார். அப்போது அலட்சியமாக இருந்து விட்டார்கள் என்றும் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க விடியா தி.மு.க. அரசு தவறி விட்டது என்றும் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த இயக்கம் 50 ஆண்டு கால வரலாற்றில், 30 ஆண்டு காலம் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை செய்தது. குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டன.
புரட்சித்தலைவர் முதன் முதலில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தினை உருவாக்கி தந்தார். அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா, எந்த நாட்டிலும் இல்லாத வகையில், ஏன் மடிக்கணினி தயாரிக்கும் நாடுகளில் இல்லாத வகையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
10 ஆண்டு கால அம்மாவின் ஆட்சியில் 55 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தான் தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில், தமிழகம் 51 சதவீதத்தை பிடித்து முதலிடத்தில் இருந்தது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுமா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு புத்தகம், நோட் புக், காலணிகள், சீருடைகள் என 14 வகை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் தான் அதிகமான கல்லூரிகளை கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடியார் உருவாக்கினார். குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி இந்திய அளவில் தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டினார்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மருத்துவப்படிப்பு பெற வேண்டும் என்ற அடிப்படையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டினை ஆளுநர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றினார்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மாணவர்களும், பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
எடப்பாடியார் முதலமைச்சராக தற்போது இருந்திருந்தால், மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கி இருப்பார். மேலும் பள்ளிகளில், கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனைகள் அதிகரித்து வருகிறது, இதை கூட சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் சுட்டிக்காட்டினார்,
அதை மறுத்த முதலமைச்சர், தற்போது போதைபொருள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார். ஆகவே எடப்பாடியார் சொன்னது உண்மை என்று நிரூபணம் ஆகி விட்டது.
போதைப்பொருளை நடமாட்டத்தை தடுக்க தவறிய அரசாக இந்த அரசு உள்ளது. நிச்சயமாக எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார். மாணவர்களுக்கான மடிக்கணினி போன்ற திட்டங்களை மீண்டும் வழங்குவார்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.