சிறப்பு செய்திகள்

போராட்டத்தை பார்த்து நடு, நடுங்குகிறார் ஸ்டாலின்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரை

சேலம்
சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், ஆட்டையாம்பட்டியில் நேற்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், வீரபாண்டி ஒன்றிய குழு தலைவருமான எஸ்.வருதராஜ் வரவேற்புரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா. இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கு தகுதியான ஒரு கட்சி அ.தி.மு.க மட்டும் தான். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து விலகுகின்ற போது, அண்ணா பெயரில் தான் கட்சியை துவக்கினார். அவரின் உருவம் பொறித்த கொடி தான் இன்றைக்கு பறந்து கொண்டிருக்கிறது.

அண்ணாவுக்கு பெருமையும், புகழையும் சேர்த்த கட்சி கழகம் தான். அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார். அவர் கடைசி வரை, இறுதிவரை மக்களுக்கு உழைத்த மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். பேரறிஞர் அண்ணா ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார். அழகான வார்த்தை. இதனை நிரூபித்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

ஏழைகளுக்காகத் திட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர் புரட்சித்தலைவர். அண்ணாவின் பிறந்தநாள் விழா என்று சொல்லும் போது, அவர் எது எதற்கெல்லாம் அக்கறை செலுத்தினார்.

அவர் உயிரோடு இருந்த காலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று நினைத்திருந்தாரோ, அதனை எல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவருடைய வாழ்நாளிலேயே செய்து காட்டி மறைந்த ஒரே தலைவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அண்ணா இந்த மண்ணிலிருந்து மறைந்து விட்டார். இன்றைக்கும் அவரின் பிறந்தநாள் விழாவை சிறப்போடு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அதுபோல புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மண்ணிலிருந்து மறைந்து விட்டார். அவர் செய்த சாதனை, மக்களுக்கு செய்த நன்மை, இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறது. அதனால்தான் இன்றைக்கும் உயிரோட்டம் உள்ள கட்சியாக அ.தி.மு.க திகழ்ந்து வருகிறது.

நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள். அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, இந்த மூன்று தலைவர்களுக்கும் குடும்பம் இல்லை. அவர்களுக்கு எல்லாம் நாம் தான் பிள்ளைகள் என்று அவர்கள் பார்த்தார்கள். கழக தொண்டர்களையும், நிர்வாகிகளையும், மக்களையும் தான் தன்னுடைய பிள்ளைகளாக நினைத்து, ஆட்சி செய்த தலைவர்கள் இவர்கள்.

ஏதோ மனிதன் பிறக்கின்றார், வாழ்கின்றார், இறக்கின்றார். இடைப்பட்ட காலத்திலே என்ன சாதனை செய்கின்றாரோ அது தான் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கும். அப்படி நம்முடைய முப்பெரும் தலைவர்கள் மக்களுக்கு செய்த நன்மையினால், மக்கள் உள்ளத்தில் இன்றைக்கு தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். சீக்கிரம் போனால் போதும் என்று மக்கள் நினைக்கின்ற தலைவர்கள் மத்தியிலே, மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம்முடைய தலைவர்கள்.

அந்த முப்பெரும் தலைவர்கள் வாழ்ந்த காலத்திலே, முதலமைச்சராக இருந்த காலத்திலே நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி, செயல்படுத்திய காரணத்தினால் இன்றைக்கு இந்தியாவிலே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றால் அது நம்முடைய தலைவர்கள் உழைத்த உழைப்பு.

நாட்டு மக்களுக்கு அளித்த திட்டம். அதனால் மக்களுக்கு கிடைத்த நன்மை. அதனால் இன்றைக்கு தமிழ்நாடு வளர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளம் இட்டவர்கள் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தான்.

முப்பெரும் தலைவர்கள் உழைத்த உழைப்பால் தமிழகம் ஏற்றம்பெற்றது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் உயர பாடுபட்டவர்கள். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்கள். அண்ணாவும் சரி, புரட்சித்தலைவரும் சரி, புரட்சித்தலைவி அம்மாவும் சரி, இறுதிவரை மக்களுக்காக பாடுபட்டு இன்றைக்கு தெய்வமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களுக்கு நாம் பிறந்தநாள் விழா எடுக்கின்றோம். இதுதான் அதிமுக.

கழகத்தை பொறுத்தவரையில் சாதாரண மக்கள் நிறைந்த கட்சி. இன்றைக்கு ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு திட்டங்களை தீட்டி நன்மை செய்து, அந்த மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பாடுபடுகின்ற கட்சி கழகம் தான். அதனால் தான் எல்லோருக்கும் பொறாமை.

நம்முடைய கட்சியின் மீது பொறாமை. இந்த கட்சி எத்தனையோ முறை உடைகிறது. பிளவுபடுத்த பார்க்கிறார்கள். எதுவும் முடியவில்லை. உயிரோட்டமுள்ள கட்சி நமது கழகம். எவராலும் பிளக்கவும் முடியாது. பிளக்க நினைத்தால் அவர்கள் தான் காணாமல் போவார்கள். கழகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனை வருகின்ற போது, அந்த சோதனைகள் அனைத்தையும் படிக்கட்டாக்கி சாதனை படைத்த வரலாறு தான் நிலைத்து நிற்கின்றது.

புரட்சித்தலைவர் மறைவுக்கு பிறகு கழகம் இரண்டானது. அப்போது கருணாநிதி மகிழ்ச்சியோடு இருந்தார். எம்ஜிஆர் எப்போது மறைவார் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். மறைந்து விட்டார். அதோடு போய்விடும் என்று நினைத்தார்கள். புரட்சித்தலைவி அம்மா பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் புரட்சித்தலைவர் ஆட்சியை 1991 ல் கொண்டு வந்து வரலாற்றை படைத்தார்.

அதுபோல புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்குப்பிறகு எவ்வளவே முயற்சி செய்தார் ஸ்டாலின். எவ்வளவே வேடத்தை போட்டு பார்த்தார். சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வந்து பார்த்தார். எதுவும் செய்ய முடியவில்லை. கழக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது கழகம். சாதாரண ஆட்சியை அமைக்கவில்லை.

அம்மா இரவு பகல் பாராமல் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து மக்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். அந்த ஆட்சியை கலைக்க நினைத்தார். அதுவும் எடுபடவில்லை. அம்மா மறைவுக்கு பிறகு கழகம் வீறு நடைகொண்டு சுமார் 4 ஆண்டு, 2 மாதம் நான் முதலமைச்சராக பதவி வகித்து சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அளித்தேன்.

அப்போது ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார். சட்டமன்றத்திலே பேசினார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்து விடும். 3 மாதத்தில், 6 மாதத்திலே கவிழ்ந்து விடும் என்றார். 4 ஆண்டு 2 மாதம், இறுதி வரை சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு வழங்கினோம். அப்போது எவ்வளவு பிரச்சினையை நீங்கள் உருவாக்கினீர்கள். கொஞ்ச, நஞ்சமான போராட்டமா.

நான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் தான் அதிகமான போராட்டத்தை சந்தித்தோம். யார் போராட்டம் செய்வதாக இருந்தாலும் அனுமதி அளித்தோம். உரிமைக்காக போராடுகிறார்கள்.

அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக போராடுகிறார்கள். நீங்கள் ஒரு போராட்டத்திற்கு நடுநடுங்கியுள்ளீர்கள். ஒரே ஒரு போராட்டத்தைத் தான் அறிவித்தோம். அந்த ஒரு போராட்டத்திற்கே அனுமதி தர மறுக்கிறார்கள். சேலத்தில் மேடை போடுவதற்கு அனுமதி தரவில்லை. தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக 74 மாவட்டம் உள்ளது.

74 மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசிடம் அனுமதி கேட்கிறார்கள். இன்றைக்கு மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இவற்றைப்பற்றி நாங்கள் மக்களிடத்தில் எடுத்துச்சொல்ல வேண்டும் எங்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று கேட்டால் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.

அந்த அளவுக்கு ஸ்டாலின் நடுங்கிப்போயிருக்கிறார். ஒரு கூட்டத்திற்கே நீங்கள் நடுங்கிப்போய் விட்டீர்கள். நாங்கள் ஆயிரக்கணக்க்கான போராட்டத்திற்கு அனுமதி அளித்து, அத்தனையையும் சமாளித்து, அவர்கள் அமைதி பெறும் அளவு, மனநிறைவு பெறும் அளவு சிறப்பான ஆட்சி வழங்கிய அரசு அம்மாவின் ஆட்சி.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.