தற்போதைய செய்திகள்

மகாபாரத போரில் துரியோதனான ஸ்டாலினை நிச்சயம் வீழ்த்துவோம்-அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

விருதுநகர்

நடக்க இருக்கும் மகாபாரத போரில் துரியோதனான ஸ்டாலினை நிச்சயம் வீழ்த்துவோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்மாபட்டி சுப்புக்காளை தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி தலைவரின் போக்கு பிடிக்காமல், அங்கிருந்து விலகியுள்ளனர். காங்கிரசில் உழைப்புக்கு அங்கீகாரம், மரியாதை கிடைக்காது. இன்றைக்கு இருப்பது இத்தாலி காங்கிரஸ். அவர்களுக்கு உழைப்பது வீண். விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளையும் கழகம் கைப்பற்றும். நடக்க இருக்கும் மகாபாரத போரில் துரியோதனான ஸ்டாலினை வீழ்த்தி நாம் வெற்றி பெறுவோம்.

பட்டாசு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என ஸ்டாலின் கூறினார். ஆனால் இப்பொழுது பட்டாசு விற்பனையை தடுக்க வேண்டும் என தி.மு.க., பொது செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இப்படி பட்டாசு தொழிலை அழிக்க தி.மு.க., நினைக்கிறது. எந்த மதமாக இருந்தாலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதனை தடை செய்ய சொல்லும் எந்த முகத்தோடு ஓட்டு கேட்டு வருவார்கள். பட்டாசு தொழில்தான் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். மக்களின் பிறப்புரிமை. ஸ்டாலினின் சூது, வாது வெளிப்பட்டு விட்டது.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.