தற்போதைய செய்திகள்

மக்களின் குறைகளை தீர்க்க உறுதியுடன் குரல் கொடுப்போம்-முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

புதுக்கோட்டை

மக்களின் குறைகளை தீர்க்க உறுதியுடன் நின்று குரல் கொடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் அன்னவாசலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பெருந்தலைவர் காமராஜர் கனவு கண்ட காவேரி-வைகை-குண்டாறு திட்டத்தை துவக்கியது கழக ஆட்சியில் தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இந்த தொகுதியில் இன்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது,


ஆளும் கட்சி என்பது ஓடுகின்ற தண்ணீரில் நீச்சல் அடிப்பது போன்றது. எதிர்க்கட்சி என்பது எதிரில் வருகின்ற அலையை, எதிர்த்து எதிர்நீச்சல் அடிப்பது போன்றது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் விராலிமலை மக்களின் குரலாக தொடர்ந்து சட்டமன்றத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்.

முதல் சட்டசபை கூட்டத்தொடரில் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கழகத்தின் சார்பில் முதல் ஆளாக உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான என்னை பேச வைத்தனர். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியின்படி முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக, கூறியதற்கு தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பினேன். விரைவில் ஒவ்வொரு ஊராட்சி வாரியாக மக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தீர்வு செய்ய நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறும்.

எதிர்க்கட்சி என்பது நமக்கு புதிதல்ல. பல சோதனைகளை தாண்டி கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே மனம் தளராமல் கழக நிர்வாகிகள் உழைக்க வேண்டும். இனி வருகின்ற காலத்தில் கழக நிர்வாகிகள் ஆற்றல் மிகுந்த எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு மக்கள் குறைகளை சரி செய்ய உறுதியாக நின்று குரல் கொடுக்க வேண்டும்.

மிக விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கழக நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.