தற்போதைய செய்திகள்

மக்களின் பேராதரவோடு மீண்டும் எடப்பாடியாரே முதல்வர் ஆவார்-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

ஈரோடு

மக்களின் பேராதரவோடு மீண்டும் எடப்பாடியாரே முதலமைச்சர் ஆவார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் பயன் பெறும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு ரூ.1652 கோடி நிதி ஒதுக்கி கூடிய விரைவில் செயலுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்துவரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகளை தெரிவிக்கும் கூட்டமும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிறப்பு கூட்டமும் துடுப்பதி அருகில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அத்திக்கடவு- அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.கே.பெரியசாமி தலைமை தாங்கினார். மூத்த ஒருங்கிணைப்பாளர் சி.எச்.அம்பலவாணன் முன்னிலை வகித்தார். அத்திக்கடவு ஆர்வலர் டி.பி. கார்த்திகேயன் வரவேற்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.முருகபூபதி, அன்னூர் எஸ்.எம்.ஆர்.நடராஜ், கருவலூர் வெள்ளியங்கிரி, பெருந்துறை தொகுதி கழக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், பள்ளி கல்விதுறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பெருந்துறை தொகுதி கழக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாரை அறிமுகப் படுத்தி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு ஆய்வு பணிகளுக்கு ரூ.3.86 கோடி ஒதுக்கினார். ஆய்வு பணிகள் நடைபெற்ற பிறகு விவசாயியான எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் திட்டத்திற்கு மாநில அரசு ரூ 1652கோடி நிதி ஒதுக்கி திட்ட பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அம்மா அரசு விளங்கி வருகிறது. விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே..பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மக்களோடு வாழ்கிறார் மக்களுக்காக திட்டங்களை வழங்குகிறார். சோதனைகளை சாதனைகளாக மாற்றி 4 ஆண்டு காலம் தனது அறிவாற்றலால் சிறப்பாக நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களின் பேராதரவுடன் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.