சிறப்பு செய்திகள்

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அம்மா அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் –

சென்னை

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்திட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காலங்களில் கூட இதுவரை 41 புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதன்மூலம் சுமார் 30,500 கோடி ரூபாய் முதலீடும், 67,200 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் ஏப்ரல் முதல் ஜூன் 2020 காலங்களில் அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது ஒரு தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்தும் தொழில் நிறுவனங்கள் அவர்களை பரிசோதனை செய்து அரசு வழிகாட்டுதல்களின்படி பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எனது தலைமையில், மாநிலம் மற்றும் மாவட்ட வங்கிகளுடனான கூட்டங்கள் நடத்தி, உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அறிவுறுத்தியதால் மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிகளவில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்புதலைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்திலும், அம்மா அரசின் கடும் முயற்சிகளின் காரணமாக அதிக முதலீட்டை ஈர்த்து, சுமார் 42 தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் பெரும்பாலும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல, இந்திய அளவில் GDP 4% உள்ளது. ஆனால், தமிழகத்தில் GDP 8% ஆக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிகளின் இடையறா பொய் பிரச்சாரத்திற்கு மாறாக கொரோனா பேரிடர் காலத்திற்கு முந்தைய (FEB: 8.3%) நிலைக்கு கீழாக வேலையின்மை விகிதம் 2.6% ஆக குறைந்துள்ளது. இன்னும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அம்மா அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.