தற்போதைய செய்திகள்

மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை கழக அரசு வழங்கி வருகிறது – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி

மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நிவாரண உதவிகளை கழக அரசு வழங்கி வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நிவாரண உதவிகளாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கடந்த 2 மாதத்துக்கு மேலாக மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள லாரி டிரைவர்கள், சலவைத் தொழிலாளர்கள், இஸ்லாமிய பெருமக்கள், அருந்ததியர் என ஆயிரம் பேருக்கு கழகத்தின் சார்பில் அரிசி ,பருப்பு, சர்க்கரை ,எண்ணெய் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பை தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் பாலக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொரோனா காலமாக கடந்த மாதம் தமிழக மக்களுக்கு நிவாரணமாக கூடுதலாக அரிசியை வழங்கினார். தற்போது இருமடங்கு உயர்த்தி அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்து டோக்கன் வழங்கப்பட்டு தற்போது அனைத்து மக்களுக்கும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது மாதமாக நிவாரண பொருட்களை வழங்கக்கூடிய முதல்வராக எடப்பாடியார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத்தொழிலாளர்கள், சலூன் கடைகள் கூட இயங்காத காரணத்தால் நிவாரணம் வழங்க வேண்டி கேட்டுக் கொண்டதின் பேரில் பாலகோடு பகுதியை மையமாகக் கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் எங்கெங்கு மனுக்கள் கொடுத்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஆதரவு தருகின்ற வகையில் இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இங்கே வருகை தந்துள்ள லாரி ஓட்டுனர்கள், சலவைத்தொழிலாளர்கள் இஸ்லாமியர்கள், இந்திரா நகர் குடியிருப்போர் மற்றும் அருந்ததியர் நகரில் குடியிருப்போர் கோரிக்கை வைத்ததின் பெயரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடியாரின் வழியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இயற்கை சீற்றம் என்பது எப்பொழுதெல்லாம் வந்து தாக்கும் என யாருக்கும் தெரியாது. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் இந்த காலத்தில் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பதை நீங்கள் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையிலேயே தான் தமிழக அரசானது இந்த மாதத்திற்கு கூடுதலாக அரிசி பருப்பு வழங்க உருவாக்கி தந்திருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் இன்று இங்கு கழகத்தினர் வைத்த பல்வேறு கோரிக்கையின் அடிப்படையில் இன்றைக்கு இந்த பொருட்களை வழங்க எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடக கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எங்களால் இயன்ற உதவிகளை நாங்களும் செய்து வருகின்றோம்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும் தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலகோடு ஒன்றியகுழு தலைவர் பாஞ்சாலை கோபால், ஒன்றிய கழக செயலாளர் கோபால், நகர கழக செயலாளர் சங்கர், முன்னாள் நகர கழக செயலாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதூர் சுப்பிரமணி,மாது,மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.