மற்றவை

மக்கள் தான் நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்குவர்-முதலமைச்சர் நம்பிக்கை

சேலம்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் கழக வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று சேலம் மாநகர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் ஓமலூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- நீட் தேர்வு நர்சிங் கல்லூரி வரை நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து?

பதில்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வு தமிழகத்திலே இருக்கக்கூடாது என்பது தான் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

கேள்வி:- தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளீர்கள், பல இடங்களில் அ.தி.மு.க.வினரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பதில்:- இது எல்லா கட்சியிலும் உள்ளது தான். அ.தி.மு.க.வை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டாம். எல்லாருமே ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் வருத்தத்தை தெரிவிக்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. அனைவரிடமும் பேசி சமாதானப்படுத்துவோம்.

கேள்வி:- ஏற்கனவே, அம்மா உணவகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே கலைஞர் உணவகம் கொண்டு வருவோம் என கூறியது குறித்து?

பதில்:- தெரியவில்லை, அதை நான் படித்துப் பார்த்துதான் கூற வேண்டும். அறிக்கை இன்னும் முழுவதுமாக கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் படித்துப் பார்த்து தான் கருத்து கூற முடியும்.

கேள்வி:- புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் உங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து?

பதில்:- அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு சில கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். பாரதிய ஜனதாவினரிடமும், முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. சுமூகமாக பேச்சுவார்த்தை முடிவடைந்து கழகத்தின் சார்பில் எங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தி.மு.க.வில் கூட பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் கூட்டணியே அறிவித்தார்கள். கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

கேள்வி:- வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன், தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் என தி.மு.க. தலைவர் கூறியிள்ளாரே?

பதில்:- நாங்கள் தான் முதன் முதலாக வெளியிட்டோம். தேர்தல் அறிக்கையாக அல்ல. மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை தேர்தல் வருவதற்கு முன்பே நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அண்ணா தி.மு.க. அரசாங்கம், அண்ணா தி.மு.க கட்சி. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து உடனே அமல்படுத்திய கட்சி அண்ணா தி.மு.க கட்சி, அண்ணா தி.மு.க. அரசாங்கம்.

தேர்தலுக்காக அல்ல, வறட்சி, புயல், வெள்ளம் போன்றவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தின. நானும் புயல் வந்த போது பல்வேறு மாவட்டங்களை பார்வையிட்ட போது விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையிலே அவர்கள் வாங்கிய பயிர்கடன் ரத்து செய்யப்பட்டது.

கேள்வி:- பெரும்பாலான கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்று தொடர்ந்து செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்.

பதில்:- நீங்களே தான் கூறிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு சாதகமான டி.வி. இருந்தால் அதில் நீங்களே போட்டுக் கொள்கிறீர்கள். இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள், விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும். எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தோம். 2016-ல் தி.மு.க ஜெயித்த தொகுதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி. அதேபோல நாங்குநேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். அப்போது எல்லா பத்திரிகையிலும் இப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். அண்ணா தி.மு.கவிற்கு வெற்றி வாய்ப்பு கிடையாது என்று, பத்திரிகையில் வந்த செய்தி பொய்ச் செய்தி என்று முறியடிக்கிற விதமாக சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 34 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இயக்கம், அண்ணா தி.மு.க இயக்கம்.

கேள்வி:- தமிழகத்தில் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிவிப்பினை பாருங்கள். அவர்களது அறிவிப்பை முழுமையாக பார்த்த பின்னர் தான் கருத்து வெளியிட முடியும்.

கேள்வி:- தேர்தலில் அ.தி.மு.க. எத்தனை இடங்களை கைப்பற்றும்.

பதில்:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடத்தினை கைப்பற்றும். தி.மு.க. 200 தொகுதியை கைப்பற்றும் என்றால், அவர் என்ன ஜோசியமா வைத்துள்ளார். மக்கள் தான் வாக்களிக்கிறார்கள். மக்கள் அளிப்பது தான் இறுதியான தீர்ப்பு. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. ஆகவே மக்கள் தான் நீதிபதிகள். இந்த தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள் என்று நாங்கள் எண்ணுகிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.