தற்போதைய செய்திகள்

மக்கள் நலனுக்காக கழகம் தொடர்ந்து உழைக்கும்-என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. திட்டவட்டம்

கன்னியாகுமரி

அம்பட்டையான்கோணம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்த என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மக்கள் நலனுக்காக கழகம் எப்போதும் உழைக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அருமநல்லூர் அருகே அம்பட்டையான் கோணம் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அவ்வப்போது மின்சாரம் தடைபட்டு வந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் மாணவர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இது தொடர்பாக தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரத்தை அப்பகுதி மக்கள் சந்தித்து இப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அவர் உறுதி அளித்ததோடு புதிய டிரான்ஸ்மார் அமைத்து மக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு அதற்கான கடிதத்தை வழங்கினார்.

இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அம்பட்டையான்கோணம் கிராமத்தில் ரூ.12 லட்சத்து 63 ஆயிரத்து 350 மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வந்த புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த குறைந்த மின் அழுத்தம் காரணமாக பாதிப்புக்குள்ளான மாணவர்கள் மற்றும் விவசாயிகள் புதிய டிரான்ஸ்பார்மர் வந்ததன் மூலம் பயன்பெறுவார்கள். மேலும் இதுவரை இருந்து வந்த குறைந்த மின் அழுத்தத்தால் ஏற்படும் மின்தடை இனிமேல் ஏற்படாது. ெதாகுதி மக்களின் நலனுக்காக கழகம் தொடர்ந்து உழைக்கும்.

இவ்வாறு என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தோவாளை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், அருமநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஏசுதாஸ், ஒன்றிய பிரதிநிதி ஆரல் கிருஷ்ணன், ஞாலம் ஜெகதீஸ், பார்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.