தற்போதைய செய்திகள்

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர்

மக்கள் நலனுக்கு எதிரான குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்தி கொண்டிருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசி உள்ளார்.

கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பாக அச்சகத்தொழிலில் மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் சங்கத்தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சகங்களும், 20 ஆயிரம் தொழிலாளர்களும் இந்த தொழிலை நம்பி உள்ளனர். அச்சுத்தொழிலின் மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வாக 40 சதவீதம் திடீரென்று உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் நோட்டு, புத்தகங்கள் விலை உயரும். இதனால் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த ஆட்சி அமைந்தவுடன் முதலில் கட்டிட மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்ந்தது.

தற்போது அனைத்து பொருட்களின் விலையும் உச்சத்தில் உள்ளது 1979-ம் ஆண்டு புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு காகிதத்தால் செய்தி நிறுவனம் 80 ஆயிரம் டன் உற்பத்தி நிறுவனமாக தொடங்கப்பட்டது.

அது அ.தி.மு.க ஆட்சியில் 6 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்து வருடத்திற்கு 160 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அந்த நிறுவனத்தில் தற்போது எங்கே குறைபாடு என்று அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்தி அதன் மூலம் விலையேற்றம் செய்துள்ளார்களோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

அச்சுத்தொழிலாளர் சங்கத்திற்கு அரசு மானிய விலையில் பேப்பர் பொருட்களை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழில் 30 லட்சம் தொழிலாளர்களும் ஒன்றரை லட்சம் அச்சகங்களும் உள்ளன. இந்த தொழிலாளர்கள் வாழ இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் ஆட்சியில் முந்திரி தொழிலாளர்கள் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவுடன் அப்போதைய அமைச்சர் டி.ஜெயக்குமார் மத்திய அரசுடன் பேசி அதை 5 சதவீதமாக குறைத்த வரலாறு எங்களுக்கு உண்டு.

மக்கள் நலனுக்கு எதிரான குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்தி கொண்டிருக்கின்றது. அதை மறைக்க திராவிட மாடல் என்றும், ஒன்றிய அரசு என்றும் மக்களை திசை திருப்பி கொண்டிருக்கின்றார்கள்.

திராவிட மாடல் என்றால் என்ன?. இதில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றதா சமத்துவம் சகோதரத்துவம் நிறைந்து இருக்கின்றதா. அன்பு அரவணைப்பு உள்ளதா. இந்த ஆட்சி அமைந்தவுடன் பல நிபுணர் குழுக்களை அமைத்தார்கள்.

நிதி நிர்வாக சீர்திருத்தம், நீர் மேலாண்மை என பல குழு அமைத்தார்கள். அந்த நிபுணர் குழு இதுவரை என்ன வேலை செய்திருக்கிறது. டீசல் விலையை மாநில வரி வருவாயிலிருந்து குறைப்போம் என்று சொன்ன ஸ்டாலின் இதுவரை குறைக்கவில்லை.

காஸ் சிலிண்டர் விலை தற்போது உயர்ந்து உள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திருப்பூர் பின்னலாடை நூல் 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் எல்லாம் மிகவும் நிதி நெருக்கடி சூழ்நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்த அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.காசிநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமேகலை தஷ்ணா, தெய்வ பக்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.