தற்போதைய செய்திகள்

மக்கள் நலனை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:-

மக்கள் நலனை காப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ரமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில் சமூகப்பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியுள்ளது.

மதுக்கடைகளை திறப்பதால் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என்பது உள்ளிட்ட தீய விளைவுகள் தமிழக முதலமைச்சருக்கு தெரியாமல் இருக்காது. ஏனென்றால், சரியாக ஓராண்டுக்கு முன்பு தான், கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்.

அப்படிப்பட்டவர் இப்போது மதுக்கடைகளை தாராளமாக திறந்து விடுகிறார் என்றால் அவருக்கு யாரிடமிருந்து எந்த அளவுக்கு அழுத்தம் வருகிறது? மது ஆலைகளின் அன்பான அழுத்தத்திற்கு பணிந்து விட்டாரா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் வருவாய் பெருமளவில் குறைந்து விட்ட சூழலில், அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை உணர முடிகிறது. அரசின் வருவாயை பெருக்க குறுகிய கால திட்டங்கள், நீண்டகால திட்டங்கள் என பல வழிகள் உள்ளன. அரசு விரும்பினால் அந்த வகையில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.

ஆனால், அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு, மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மட்டும் தான் வருவாய் ஈட்ட முடியும்; அது தான் மிகவும் எளிதான வழி என்று கருதினால் நிதி நிர்வாகத்திலும், மக்கள் நலனைக் காப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாக தான் பொருளாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடி, வருவாய் ஈட்டுவதற்கான மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.