தற்போதைய செய்திகள்

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தான் விடியா தி.மு.க. அரசின் நோக்கம்

மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை

இன்றைக்கு தினம் தோறும் வசூல் வேட்டை தான் நடக்கிறது. விடியா தி.மு.க. அரசின் ஒரே எண்ணம். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து மக்களுடைய பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் என்று சென்னையில் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

மே தினத்தை முன்னிட்டு கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்
பேசியதாவது:-

அலைகடல் என திரண்டு இந்த படை போதுமா இன்றும் கொஞ்சம் வேண்டுமா என்ற வகையில் வரலாற்று சாதனை படைத்து, இப்படை தோற்கின் எப்படை வெல்லும் அப்படி கழகமே என்றும் வெல்லும் என்ற அடிப்படையில் இந்த திரளான கூட்டத்தை பார்க்கும் போது நமது புரட்சித்தலைவர் அன்றைக்கே சத்திய வாக்காக, புரட்சித்தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேலே வளரும், ஓங்கும் என்கின்ற அந்த கருத்தினை சொல்லி, அதே கருத்தை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் தமிழகத்தில் தழைக்கும் வளரும், ஓங்கும் என்ற கருத்தை சொல்லி அந்த அடிப்படையில் கழகம் ஒரு எஃகு கோட்டையாக எவரும் அசைத்து பார்க்க முடியாத கோட்டையாக ஒரு மாபெரும் கோட்டையாக இன்றைக்கு உருவெடுத்து இருக்கிறது.

இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்டிருக்கின்ற இந்த மாபெரும் இயக்கம் ஒரு வெற்றி மிக்க வீர இயக்கமாக இருக்கிறது. இன்றைக்கும் நமது புரட்சித்தலைவருடைய கனவு, அதேபோல புரட்சித்தலைவியின் கனவாக இருக்கின்ற 100 ஆண்டுகள் அல்ல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி, கழகத்தை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

ஒரு மாபெரும் சரித்திரம் மிக்க இயக்கமாக இருக்கின்ற இந்த இயக்கம் 50 ஆண்டுகளை கடந்து, பொன்விழாவை
கடந்து, இன்றைக்கு பவள விழாவை நோக்கி சென்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு கழக தொண்டர்களின் எண்ணமும் மீண்டும் தமிழகத்தில் பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் மலர வேண்டும் என்ற அறிகுறி தான் இன்றைக்கு இந்த ஆர்ப்பரிப்பு, இந்த கூட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது.

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா. இல்லை மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊர் ஊராக சொன்னார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்து கொடுக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை இன்றைக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையிலே அதனை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 10 ரூபாய் டீசலுக்கும், பெட்ரோலுக்கு 5 ரூபாய் குறைத்தது.

அதற்கு ஏற்ற வகையில் எல்லா மாநில அரசும் குறைத்து. ஆனால் மத்திய அரசு குறைத்த போதும் கூட மாநில அரசு குறைக்காமல் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் விலைவாசி தமிழகத்தில் உயர்ந்து வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள். கல்வி கட்டணம் தான் கூடுதலாக வந்ததே தவிர கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படவில்லை.

நகை கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒவ்வொரு ஊராக சென்று சொல்லி கிட்டதட்ட 35 லட்சம் பேரை நகை கடனுக்குத் தகுதி இல்லை என்று சொல்லியுள்ளார்கள். இப்படி மக்கள் எதிர்பார்க்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளார்கள்.

மின்சார வாரியத்தை பொறுத்தவரை மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு என்று சொன்னார்கள்.ஆனால் இப்போது மாதம் இருமுறை தான் கணக்கெடுப்பு செய்து வருகிறார்கள். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாது.

தமிழகத்தில் ஒரு செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு ஆதாயத்தை தேடும் வகையில் தான் இந்த விடியா அரசு செயல்பட்டு வருகிறது. அதில் ஊழல் செய்வதற்காக செயலாற்றி வருகிறது.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழ்நிலையில் இதயதெய்வம் அம்மா கொண்டுவந்த திட்டங்களை மூடுவிழா செய்வது மட்டும் தான் குறிக்கோள் என்ற அடிப்படையிலே இன்றைக்கு ஆளும் அரசு செய்து வருகிறது.

அடி மட்டத்தில் இருப்பவர்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு திட்டம் தீட்டுவது தான் ஒரு தலைவனுடைய கடமையாக இருக்கும். அடுத்தவர் மனநிலை எந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்லி

ஏழைகளின் மனதை குளிர வைத்த திட்டத்தை தீட்டி வரலாற்றிலே இன்றைக்கும் நாம் பேசக்கூடிய முதலமைச்சர் என்றால் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா தான். தாலிக்குத் தங்கம் திட்டம் இந்தியாவே பாராட்டுகின்ற ஒரு மகத்தான திட்டம். 2011-16 வரை கிட்டதட்ட 16 லட்சம் பேர் பயன்பெற்றார்கள். கிட்டதட்ட 7 லட்சம் டன் தங்கம் வழங்கினார்கள்.

12ம் வகுப்பு முடித்த பெண்கள், பட்டம் படித்த பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு சவரன் நகை அளித்த ஒரே தலைவி அம்மா அவர்கள். 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வேறு யாராவது கொடுத்தார்களா.

பணம் கேட்டால் போனை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கிறது. ஆனால் 14 லட்சம் குடும்பம் பயன்பெறும் வகையில் தங்கத்தை அளித்து கிட்டதட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த அரசு அம்மா அரசு. இன்றைக்கு அந்த திட்டம் மூடு விழா செய்யப்பட்டு விட்டது.

அம்மா காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு மூடுவிழா செய்து கொண்டிருக்கும் விடியா தி.மு.க. அரசின் ஒரே எண்ணம். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து மக்களுடைய பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற வகையிலே இன்றைக்கு தினம்தோறும் வசூல் வேட்டை தான் நடக்கிறது.

கரூரில் போடாத சாலைக்கு கிட்டதட்ட 4.50 கோடி ரூபாய் பணம் எடுத்துள்ளார்கள். இதில் 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அரசு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விடியா அரசின் அமைச்சர், முதலமைச்சர் பேச்சை கேட்டு நீங்கள் அத்துமீறி அராஜகத்தை கையில் எடுத்து, லஞ்ச லாவண்யத்திற்கு துணை போனால் கடைசியில் நீங்கள் பலிகடா ஆவீர்கள். உங்களை யாரும் காப்பாற்ற மாட்டார்கள்.

அம்மா ஆட்சி மலரும் போது இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும். நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.