தற்போதைய செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை ஸ்டாலின் எந்த காலத்திலும் தீர்க்க முடியாது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை

மக்கள் பிரச்சினைகளை ஸ்டாலின் எந்த காலத்திலும் தீர்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கழக அம்மா பேரவை சார்பில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகளை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளரக்ளுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார். மக்கள் குறைகளை போக்குவதில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாய் திகழ்கிறார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் 5 லட்சத்து 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இது தவிர மக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் ரூ.69.21 கோடி மதிப்பீட்டில் 1100 என்ற முதமைச்சர் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் குறைதீர்க்கும் அமைப்புகளை ஒரே தளத்தில் ஒன்றிணைந்து சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உதவி மையம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். இதில் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் மொபைல் ஆப் வழியாக 24 மணி நேரமும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று 100 நாட்களில் குறைகளை தீர்ப்பேன் என்று கூறுகிறார். 5 முறை ஆட்சி செய்த போது மக்களுக்கு தி.மு.க. என்ன நன்மை செய்தது என்பதை ஸ்டாலின் கூற முடியுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல என்பார்கள்.

அதுபோல அடுக்கடுக்கான சாதனை திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை முதலமைச்சர் நனவாக்கி வருகிறார். முதலமைச்சருக்கு உதவியாக துணை முதலமைச்சர் இருக்கிறார்.

விவசாயிகளின் பாதுகாவலராக திகழம் ஒரே அரசு அம்மாவின் அரசாகும். கடந்த 5-ந்தேதி முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 12,110 கோடி ரூபாய் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

இப்படி கடந்த 10 ஆண்டுகளில் ரூ.17,428 கோடி அளவில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்த ஒரே அரசு அம்மாவின் அரசு. இந்த விவசாய கடன் தள்ளுபடியில் திமுகவினரும் பயன் பெற்றுள்ளனர் என்பதை ஸ்டாலின் மறுக்க முடியாது.

100 நாட்களில் பிரச்சினையை தீர்ப்போம் என்று ஸ்டாலின் கூறுகிறாரே? இவர் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு செய்த திட்டங்களை சொல்ல முடியுமா? ஸ்டாலினால் எந்த காலத்திலும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. முல்லைப் பெரியாறு, காவேரி, கச்சத்தீவு போன்றவற்றையெல்லாம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.

அதுமட்டுமல்லாது நீட் தேர்வு, மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு கொண்டு வந்ததும் தி.மு.க. தான். ஆனால் முல்லைப் பெரியாறு, காவேரி பிரச்சினை, ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் இழந்த உரிமையை அம்மாவின் அரசு மீட்டுத் தந்துள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களாகிய நீங்கள் அம்மா அரசிற்கு நல் ஆதரவை தந்து கழக வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெற செய்து திமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.