தற்போதைய செய்திகள்

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சென்னை

மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே திமுக போராட்டம் நடத்துகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொரோனா நோய் கண்டறியப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்கள், மருத்துகள் மற்றும் மனநல அறிவுரைகள் வழங்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட முன்மாதிரி தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்பு அங்குள்ள நகர் நலவாழ்வு மையத்தில் சர்க்கரை, இருதயநோய், இரத்த அழுத்தம் போன்ற இணை நோய் பரிசோதனை மையத்தினை பார்வையிட்டு அங்கு சிகிச்சை பெறும் இணை நோயாளர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மருத்து பொருட்கள் மற்றும் அவர்களுக்கு அச்ச உணர்வை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் முன்மாதிரி தன்னார்வலர்களின் பணி மிகவும் மகத்தானது, உயிரை பணயம் வைத்து ஆற்றும் பணி மிகவும் பாராட்டுக்குரியது. தமிழக அரசின் ஆயுர்வேத, அலோபதி, சித்தா, ஹோமியோபதி போன்ற பல்வேறு மருத்துவ முறைகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை பின்பு கொரோனா ஆரம்ப நிலையிலே கண்டறியப்பட்டு உடனடி சிகிச்சை அளித்து குணமடைய செய்தல் போன்றவற்றால் கொரோனா சென்னையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. திருவொற்றியூர் மண்டலத்தில் 3.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இம்மண்டலத்தில் 3,310 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 2,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 65 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 15,724 பேருக்கு இணை நோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருந்து தடுப்பூசி இதுவரை அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படாமல் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர்.

இன்னும் 100 சதவீதம் இத்தொற்றிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். ஊரடங்கு நேரங்களில் பொதுமக்கள் அடிக்கடி வெளியில் சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதில் திருவொற்றியூர் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என தெரியும் போது முன்கூட்டியே பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். சூழலை உணர்ந்து மக்கள் முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும். ஒரே நாளில் சென்று வாங்க கூடாது. நண்பர்கள் உறவினர்களுடம் இணைந்து பழகும் பழக்கம் நம்மிடம் உள்ளது. ஆனால் தற்போதைய சூழலை உணர்ந்து இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

மீன் சாப்பிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அனைவரும் ஒரே நாளில் சென்று வாங்குவதை தவிர்க்க வேண்டும். குடும்ப அட்டைதாரார்களுக்கு முக கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கும். குறைந்த விலையில், தரமான முக்கவசத்தை வழங்க வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மக்களிடம் பீதியை ஏற்படுத்த திமுக போரட்டம் நடத்துகிறது.

மின்கட்டணம் குறித்து ஏற்கனவே அமைச்சர் விளிக்கமளித்துள்ள நிலையில் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்த திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்த நேற்று முதலமைச்சர் முன்னிலையில் 10,450 கோடி மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. சுமார் 13,507 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கண்காணிப்பு அலுவலர் வர்கீஸ், முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.