தற்போதைய செய்திகள்

மணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலை கடை – அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையை கழக சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பா.பென்னையா, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

நகரும் நியாய விலைகடை திட்டத்தை 21.09.2020 அன்று முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மணிமங்கலத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 19 நியாயவிலை கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 436 குடும்ப அட்டைதாரர்கள் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 12 நியாய விலை கடைகள் உடன் இணைக்கப்பட்டுள்ள 2523 குடும்ப அட்டைதாரர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1855 குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் அடைவார்கள். இந்த நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு ஒருநாள் வீதம் குடும்ப அட்டைதாரர்கள் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யப்படும்.

அம்மா நகரும் நியாய விலை கடை மூலம் பொருட்களை குறிப்பிட்ட நாளில் பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதாரர்கள் பின்நாட்களில் அவர்களது குடும்ப அட்டை இணைக்கப்பட்டு உள்ளதாய் கடையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன், மாவட்டக் கழக துணை செயலாளர்கள் போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், ரேவதாட்சாயணி எஸ்.எம்.சுந்தர்ராஜன், கழக பாசறை துணை செயலாளர் எஸ்.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஒ.ராஜமாணிக்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் எறையூர் இ.பி.முனுசாமி, சிங்கிலிபாடி டி.இராமச்சந்திரன், சிவராஜ், வேணுகோபால், கூட்டுறவு இணைப்பதிவாளர் காஞ்சிபுரம் மண்டலம் அக்கோ சந்திரசேகர், கூட்டுறவு கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பா.லோகநாதன், மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் ஏ.கே.எஸ்.ரவிசந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.