தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்

திருநெல்வேலி

முதலமைச்சர் உத்தரவின்படி, பிசான பருவ சாகுபடிக்காக மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து தண்ணீரை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி திறந்து விட்டார்.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையா பாண்டியன், ஐ.எஸ்.இன்பதுரை, வெ.நாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து நீரை திறந்து விட்டார்.

பின்னர் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மணிமுத்தாறு நீரொழுங்கு விதிமுறைகளின்படி 2019-2020ம் ஆண்டு 1-வது மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ் உள்ள குளங்களுக்கு முன்னுரிமை அளித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நீர்தேக்கத்தின் சாதகமான நீர்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 2020-21ம் ஆண்டு பிரதான
கால்வாய் 3-வது மற்றும் 2-வது ரீச்சுகளின் கீழ் உள்ள 12018 ஏக்கர் ஆயக்கட்டுகளுக்கு முன்னுரிமை அளித்து பிசான பருவ சாகுபடி மேற்கொள்ள எதுவாக 02.12.2020 முதல் 31.03.2021 முடிய 120 நாட்கள் 445 கனஅடி நீர் அணையில் நீர்இருப்பு நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும்.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்களுக்கு தூத்துக்குடி
மாவட்டத்தில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்கள் மூன்றாம் ரீச்சுகளின் மூலம் 93 குளங்களும், நான்காம் ரீச்சுகளின் மூலம் 74 குளங்களும் பயன்பெறும்.

பருவமழையினால் நீர்தேக்கத்தில் ஏற்படுகின்ற முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 1-வது மற்றும் 2-வது ரீச்சுகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு தக்க சமயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தாமிரபரணி பாசனத்திற்கு மணிமுத்தாறு நீர்தேக்கத்தில் உள்ள தண்ணீர் தேவைபட்டால்
விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். எனவே விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயரிய மகசூல் பெறவும் நீர் விநியோக பணியில் பொதுப்பணித்துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளருமான தச்சை கணேசராஜா, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன், பழனிவேல்முருகன், உதவி பொறியாளர்கள் மகேஷ்வரன், ரமேஷ்குமார், இளநிலை பொறியாளர் மாரியப்பன், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.