தற்போதைய செய்திகள்

மதுரையில் 40 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்

மதுரை

மதுரையில் இன்னும் 40 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகராட்சி வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து பனையூர் வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணியினை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் சீரிய நடவடிக்கை காரணமாக குடிமராமத்து திட்டத்தின் மூலம் மதுரையை சுற்றி அனைத்து கிராமங்களில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சின்ன சின்ன ஊரணிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதே போல் மாநகராட்சி பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றில் எப்பொழுது எல்லாம் தண்ணீர் வருகிறதோ அப்போது எல்லாம் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்புவதற்கு குறைந்தது 12 நாட்கள் ஆகும். இந்த தெப்பக்குளமானது 1000 அடி நீளம், 950 அடி அகலம் கொண்ட பெரிய தெப்பக்குளமாகும். தற்போது தெப்பக்குளத்தில் குறைந்தது 15 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சீரிய நடவடிக்கையால் மூன்றாவது முறை தெப்பக்குளத்தில் தண்ணீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரின் மெரினாவாக தற்போது இந்த தெப்பக்குளம் திகழ்கிறது. மதுரை மக்களின் பொழுதுபோக்கு தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் தெப்பக்குளம் மாற்றப்பட்டுள்ளது பெருமையாகும்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் மதுரை மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை என்ற இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மாடக்குளம் கண்மாயிலும் தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. மதுரையை சுற்றிலும் அனைத்து நீர்நிலைகளிலும் நிரப்பப்பட்டு உள்ளது. அம்மாவின் ஆசியோடு முதலமைச்சர் ஆட்சியில் மழை மும்மாரி பெய்து கொண்டு இருக்கிறது.

மதுரையில் முதலமைச்சர் கடந்த சாரம் 24 மணி நேரம் குடிநீர் கிடைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கப்படும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு மதுரையில் குடிநீர் பிரச்சினையே வராது. மேலும் மக்கள் தொகை அதிகரித்தால் கூட அவர்களுக்கும் குடிநீர் தேவைப்படும் அளவிற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் 2023-ம் ஆண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

கொரோனா காலத்திலும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு திட்டமும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களோடு மக்களாக உள்ளோம். மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அனைத்து மக்களும் பாரட்டும் அளவிற்கு தமிழ்நாடு அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்த ஆய்வின்போது நகர பொறியாளர் அரசு, பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஜெ.ராஜா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மனோகரன், சுகாதார அலுவலர் வீரன், உதவிப் பொறியாளர்கள் சந்தானம், ராஜசீலி உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.