மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

மதுரை
நாற்பது வருட பழக்க வழக்கத்தை மாற்றாமல் மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சியை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலயுறுத்தி உள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையின் பெருமையை போற்றும் விதமாகவும், அரசு துறை சார்பாக நடைபெறும் முக்கிய திட்டங்களை குறித்து விளக்குகின்ற வகையிலும், அரங்குகள் அமைத்தும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இத்துடன் சேர்க்கப்பட்டு ஆண்டு தோறும் அரசு சித்திரை பொருட்காட்சி நடைபெறுவது வழக்கமாகும்.
தமிழக அரசுக்கும், மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் இந்த ஆண்டும் பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெற வேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பொருட்காட்சி அமைவதன் நோக்கமே சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல், பூப்பல்லக்கு ஆகியவற்றை காணவரும் பக்தர்களுக்கும், தென்மாவட்ட மக்களுக்கும் பொழுது போக்குகின்ற வகையிலும், விழாவினை அருகாமையில் இருந்து காண்பதற்காகவும் அமைக்கப்படுவது தான் வழக்கமாக ஒன்றாக இருந்தது.
இந்த பொருட்காட்சி ஆரம்பத்தில் மாநகராட்சி மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முயற்சியால் அரசு சார்பாக பொருட்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொருட்காட்சி தமுக்கம் மைதானத்தில் சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகள் நடைபெறவில்லை.
தற்போது தமுக்கம் மைதானத்தில் அம்மா அரசால் கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவையில் உள்ள கொடிசியா அரங்கம் போல மாபெரும் அரங்கப்பணி நடைபெறுவதை சுட்டிக்காட்டி தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அரசு பொருட்காட்சியை மாட்டுத்தாவணி அருகில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வெளியூர் செல்லும் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், காய்கறி வணிக வளாகம், பூ மார்க்கெட், பழ மார்க்கெட் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக இருப்பதாலும், பக்தர்களும், பொதுமக்களும் பொருட்காட்சியை காண வெகுதூரம் செல்லும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாலும்,
கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் இறங்குதல், பூப்பல்லக்கு, தசவதாரம் ஆகிய நிகழ்ச்சி தமுக்கம் மைதானத்தின் அருகே நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் மதுரை மக்கள், தென்மாவட்ட மக்களின் வசதிக்காக தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடத்த மதுரை மக்களின் சார்பாகவும், பக்தர்களின் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
தமுக்கம் மைதானத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தை தவிர பொருட்காட்சி நடத்த போதுமான இடங்கள் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.