தற்போதைய செய்திகள்

மதுரை மேற்கு தொகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு

மதுரை

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்புகள் மற்றும் ரேஷன் கடைகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து மதுரை வைகையாற்றில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீரை ஆக்கிரமித்து இருந்த ஆகாய தாமரை செடிகள் 10 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட கழக துணைச் செயலாளர் தங்கம், மாவட்டக் கழகப் பொருளாளர் ஜெ.ராஜா, முன்னாள் துணைமேயர் திரவியம் உட்பட பலர் இருந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-

வைகை அணை திறக்காமலேயே வைகையாற்றில் தண்ணீர் வருகிறது. வைகை ஆறு முழுவதும் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகிறது. வைகையாற்றில் கலக்கும் கழிவுநீரை நன்னீராக மாற்ற ரூ.245 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வைகையாற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைகையாற்றில் 8 மாதங்களில் கழிவுநீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைகையாற்றில் அதிக அளவில் தண்ணீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் நுரை வருகிறது. வைகையாற்றில் ரசாயன கழிவு நீர் கலக்கவில்லை. வைகையாற்றில் நுரையை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஒரு காலத்தில் செல்லூர் பகுதியில் நெசவுத் தொழில் கொடிகட்டி பறந்தது. நாங்கள் கூட நான்கு தறிகள் வைத்திருந்தோம். காலப்போக்கில் வெள்ளப்பெருக்கின் காரணமாக அனைத்தும் அழிந்து விட்டன.

அதனால் தற்போது செல்லூர் பகுதியில் எந்தவித தொழிற்சாலைகளும் கிடையாது. அதனால் எந்த ஒரு ரசாயன கலவையும் வைகையாற்றில் கலப்பதற்கு வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
வைகையாற்றின் குறுக்கே ஆரப்பாளையம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பில் மேலும் தடுப்பணை கட்டப்படும். இன்னும் ஓராண்டுக்குள் வைகையாறு எழில்மிகு வைகை ஆறாக மாற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.