தற்போதைய செய்திகள்

மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி – அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவு

சென்னை

மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கூட்ட அரங்கில், தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் துறையின் பணிகள் குறித்து தலைமை அலுவலக மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நகர் ஊரமைப்புத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 2 திட்ட உதவியாளர்கள், 3 இளநிலை உதவியாளர்கள், மொத்தம் 5 நபர்களுக்கு துணை முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் சம்பந்தமான விண்ணப்பங்களுக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் விரைந்து அனுமதி வழங்கும் வண்ணம், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அரசாணை மற்றும் சுற்றறிக்கைகளை தவறாமல் பின்பற்றி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்றும், விண்ணப்பங்களில் விடுபட்டுள்ள விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப மனுதாரருக்கு வாய்ப்பளித்து, கால தாமதமின்றி அனுமதி வழங்கவும், துணை முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி,தமிழ்நாடு நகர் ஊரமைப்புத்துறை இயக்குநர் பா. கணேசன்,மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.