சிறப்பு செய்திகள்

மருத்துவர்கள் இறைவனுக்கு சமம் – முதலமைச்சர் பாராட்டு

சென்னை

மருத்துவர்களை இறைவனுக்குச் சமமாக நான் போற்றுகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, அண்ணா அரங்கத்தில், உலக புற்றுநோய் தினத்தையொட்டி அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கு புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒரு பதினைந்து இருபது நாட்களுக்கு முன்பு என்னுடைய நெருங்கிய நண்பர் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். மீண்டும் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது மருத்துவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளார், அவரை காப்பாற்றுவது மிக, மிக கடினம் என்று சொன்னார்கள். உண்மையிலேயே நான் மிக, மிக வேதனைப்பட்டேன். ஏனென்றால், ஒரு வாரத்திற்கு முன்புதான் அவரோடு தொலைபேசி வாயிலாக பேசிக் கொண்டிருந்தேன். அவ்வாறு மகிழ்ச்சிகரமாக பேசிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டபோது மிக, மிக வேதனைப்பட்டேன்.

அப்போது, எம்.ஜி.எம். மருத்துவமனை மருத்துவ குழுவினருடன் நானும், துணை முதலமைச்சரும் பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள், எங்களிடத்தில் ஒன்றுமில்லை, இறைவனிடத்தில்தான் உள்ளது, எங்களுடைய முழு திறமையையும் நாங்கள் பயன்படுத்தி அவரை குணமடையச் செய்ய பாடுபடுவோம் என்று சொன்னார்கள். இருந்தாலும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,

சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு இன்றைக்கு வீடு திரும்புகிற காட்சியை நாம்பார்க்கும்போது, உண்மையிலேயே மருத்துவர்களை இறைவனுக்குச் சமமாக நான் போற்றுகிறேன்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பது உண்மையிலேயே ஒரு ஆபத்தான கொடிய நோய். நம்முடைய காவலர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பலரது உயிரைக் குடித்துவிட்டது. இது யாரிடம் இருக்கிறதென்பதை கண்டு பிடிக்க முடியாத ஒரு விசித்திரமான நோயாக இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். விளையாட்டுத்தனமாக இருந்து விட்டால் அந்த நோய் எவ்வளவு ஆபத்தானது என்பதை நேரடியாகப் பார்த்து உணர்ந்தேன்.

காணொலிக் காட்சி மூலமாக அவருடைய மருத்துவ சிகிச்சையைப் பார்க்கின்றபோது எனக்கு மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கியது. எனவே, ஒவ்வொருவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 24 மணிநேரமும் பணியில் இருப்பவர்கள் காவலர்களும், மருத்துவர்களும்தான்.

இந்தநோய் எளிதாக தொற்றிக்கொள்ளுமென்றாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் உயிரையும், தன் குடும்பத்தாரையும் பொருட்படுத்தாமல் எந்தவித அச்சமும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடையச் செய்து , அவர் வீடு திரும்புகிற காட்சியைப் பார்க்கின்றபோது, இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து அரும்பணியாற்றிய மருத்துவர்களை எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும். எனவே, அவர்களை மனதார, உளமாற பாராட்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.