தற்போதைய செய்திகள்

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்பாடு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

சென்னை

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஸ்ரீ பெரும்புதூர் கழக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி குன்றத்தூர் ஒன்றியம்,மலையம்பாக்கம் தெருக்களில் சிமெண்ட் சாலை அல்லது தார்சாலை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்றும் வசந்தபுரி நகர், ஜெனன நகர், சீனிவாசா நகர், வடக்குமலையம்பாக்கம், தெற்கு மலையம்பாக்கம், அனுகார்டன் மெயின்ரோடு, மாடம்பாக்கம் வள்ளலார் நகர், மாணிக்கபுரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைத்து தரவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இயற்கை சீற்றங்களை புயல்வேகத்தில் எதிர்கொள்ளும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ளாட்சி சாலைகள் அதிகம் போடப்பட்டுள்ளன. ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்கு உள்பட்ட குன்றத்தூர் மலையம்பாக்கம் தெருக்களில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 200 கிலோமீட்டர் ஊராட்சி பகுதி சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு உள்ளன.

குன்றத்தூர் ஒன்றியத்தில் ரூ.83.22 கோடியில் சாலை பணிகள் இதுவரை நடைபெற்றுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. உறுப்பினர் குறிப்பிட்ட பகுதிகளில் சிமெண்ட சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.