தற்போதைய செய்திகள்

மலிவான அரசியல் நடத்துகிறது தி.மு.க.-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை

கழக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு தி.மு.க. மலிவான அரசியல் நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோயிலில் மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

தி.மு.க. அரசு தற்போது திசைமாறி செல்கிறது. அதனை சரியான பாதையில் கொண்டு செலுத்துவதற்காக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மக்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 28-ந் தேதி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

கழக நிர்வாக ரீதியாக 77 மாவட்டங்கள் உள்ளன. இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள இல்லங்கள் முன்பு உரிமைக்குரல் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

விடியலை தரப்போகிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. தற்போது மக்களை வஞ்சித்து விட்டது. தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துவிடும். ஏற்கனவே கொரோனாவால் வருமானத்தை இழந்த மக்களை மேலும் வாட்டும் வண்ணம் விலைவாசி உயர்ந்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அதனை நிறைவேற்றாமல் தற்போது மவுனம் காக்கிறது.

வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து முதன்முதலாக உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடைபெறும். இதில் மக்களுக்கு தீர்வு காணப்படாவிட்டால் மக்களை திரட்டி கழகம் நிச்சயம் போராடும்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் கொண்டு வர தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. கள்ள மது எப்படி உருவாகுமோ? அதேபோல் கள்ள லாட்டரியும் வந்துவிடும். இதன் மூலம் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தி.மு.க. அரசு நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கழக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு மலிவான அரசியலை தி.மு.க. மேற்கொள்கிறது. தற்போது நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடி, கையாலாகாதத்தனம், மக்களை ஏமாற்றும் நாடகம் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.