தற்போதைய செய்திகள்

மாணவர்களின் நலனில் அம்மா அரசு தனி கவனம் – அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

கடலூர்

மாணவர்களின் நலனில் அம்மா அரசு தனி கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ஜோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11-வது வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள், மடிகணினிகள், சீரூடைகள், பேருந்து பயண அட்டை, புத்தக பைகள், கணித உபகரண பெட்டிகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு சென்று வர மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அம்மா அவர்களால் 2011-2012ம் கல்வியாண்டில் துவக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2019-2020-ம் கல்வியாண்டு வரை கடலூர் மாவட்டத்தில் பயின்ற 92,346 மாணவர்கள் மற்றும் 1,12,282 மாணவிகள் மொத்தம் 20,4,628 மாணவர்களுக்கு ரூ.71.93 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11-வது வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 21,880 விலையில்லா மிதிவண்டிகள்
ரூ.8.62 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.

மாணவர்களின் நலனில் அம்மாவின் அரசு எப்போதுமே தனி கவனம் செலுத்தி வருகிறது. புரட்சித்தலைவரின் ஆட்சியில் சத்துணவு திட்டமும், அம்மாவின் ஆட்சியில் மடிகணினி திட்டம் அதற்கு சான்றாகும். இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டங்கள் இல்லை. இன்று தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தும் பல ஏழை மாணவர்களின் மருத்து கனவுகளை நனவாக்கி கொண்டு வருகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. ஏழை எளிய மாணவ மாணவிகள் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ கண்மணிகள் அரசால் வழங்கப்படும் இந்த விலையில்லா மிதிவண்டி திட்டத்தினை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி நல்லமுறையில் கல்வி பயின்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிணி திட்டத்தின் மூலம் வெளிநாட்டிற்கு இணையாக மாணவர்கள் கல்வி மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.