தற்போதைய செய்திகள்

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை நடத்தாதீர்

விடியா தி.மு.க. அரசுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுரை

மதுரை

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை நடத்தக்கூடாது என்று விடியா தி.மு.க. அரசுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுரை கூறி உள்ளார்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 68 , 69 ஆகிய வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கழக துணைச்செயலாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட கழக பொருளாளர் குமார், பகுதி கழக செயலாளர்கள் பைக்கரா
கருப்பசாமி, முத்துவேல், சக்தி விநாயகர் பாண்டியன் மற்றும் வட்ட கழக செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த பத்தாண்டுகளாக அம்மாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொகுதி மக்களுக்கு செய்து வந்தேன். தற்போது ஒன்றரை ஆண்டு காலம் விடியா தி.மு.க அரசு எந்த திட்டமும், மேற்கு தொகுதிக்கு ஒதுக்கப்படவில்லை. மக்களின் குறைகளை கேட்டறிந்து அதுக்கேற்றார் போல் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ், மக்களுக்கு வேண்டிய திட்ட பணிகளை செய்து கொடுத்து வருகிறேன்.

தற்போது கூட 68, 69 ஆகிய வார்டுகளில் ஏழை, எளிய மாணவ மாணவிகள் கல்வி கற்பதற்காக, மதுரை மாநகராட்சி நிர்வாகிக்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிக்காக, நவீன புதிய இரண்டு வகுப்பறைகள், சமையலறை கூடம், கழிப்பறை ஆகிய கட்டிடம் கட்டிக்கொடுப்பதற்கு, எனது மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.42.40 லட்சம் செலவில் திட்டங்கள் வகுக்கப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது, கூடுதலாக மாணவர்கள் சேர்க்கும் வகையில் அமையும்.

மாணவர்கள் எங்களுக்கு இன்னும் மடிக்கணினி வழங்கவில்லை என்று என்னிடம் கூறினார்கள். கடந்த அம்மா ஆட்சி காலத்தில் 55 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வழங்கப்படாமல் உள்ளது.

ஆகவே புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோரது ஆட்சி காலங்களில், மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14 வகை கல்வி உபகரணம் வழங்கப்பட்டது போல் அரசு வழங்கிட வேண்டும். மேலும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அரசு நடத்தக்கூடாது. கடந்த ஆட்சி காலத்தில் இதுபோன்று நாங்கள் செய்ததில்லை. 234 தொகுதிகளையும் சமமாக பார்த்து எடப்பாடியார் திட்டங்களை தந்தார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.