தற்போதைய செய்திகள்

மீண்டும் அம்மா ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி-அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

குருவாயூர்

மீண்டும் அம்மா ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி அளித்துள்ளார்.

குடவாசல் ஒன்றியத்தில் ஆத்தூர், கிள்ளியூர் சுரைக்காயூர், திருப்பாம்புரம், செருகுடி, வடுகக்குடி, திருவிழிமழலை, அண்ணியூர், வடமட்டம், பரவாக்கரை, சற்குணேஸ்வரபுரம், கடலங்குடி, கூந்தலூர், மணவாளநல்லூர், தேதியூர், எரவாஞ்சேரி, மருத்துவக்குடி, விஷ்ணுபுரம் ஆகிய இடங்களில் நன்னிலம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் ஆத்தூரில் பிரச்சாரத்தின்போது அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

இப்படி உங்கள் முன் நான் நிற்பது ஒரு அதிசயமான நிகழ்வு. நான் உயிர் பிழைப்பேனா என்று அஞ்சிய நிலையில் நன்னிலம் தொகுதி வாக்காளர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து என்னுடைய உயிரை மீட்டுக் கொடுத்துள்ளனர். எனது உயிரை மீட்டுக் கொடுத்த நன்னிலம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

அதுபோல் உங்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராகவும் இருப்பேன். கடந்த இரண்டு முறை என்னை வெற்றிபெற செய்தீர்கள். மீண்டும் உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையின் போது மக்கள் சிரமப்பட கூடாது என்பதற்காக பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2500 ஐ முதலமைச்சர் வழங்கினார். மேலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு பின் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 காப்பு தொகையாக வழங்கப்படும். வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் விலையில்லாது வழங்கப்படும். வீடு தோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின்னால் உடனடியாக நிறைவேற்றப்பட்டு பொருட்கள் உங்கள் தேடி வீடு தேடி வந்து வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.