தற்போதைய செய்திகள்

மீண்டும் கழக ஆட்சி அமைய ஒன்றுபட்டு உழைப்போம்

மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி சூளுரை

ராமநாதபுரம்

மீண்டும் கழக ஆட்சி அமைய ஒன்றுபட்டு உழைப்போம் என்று மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி சூளுரைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கிடாரம் ஊராட்சியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய கழக செயலாளர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தார்.

கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் ஐ.கே.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-

தமிழக மக்களின் வாழ்வு சிறக்க கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திட அனைவரும் உறுதியேற்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, கலாம் பெயரில் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தந்த முதல்வரின் கரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் சிறக்க கழக நிர்வாகிகள் அனைவரும் மக்களை நேரடியாக சந்தித்து கழக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துரைத்து இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி மீண்டும் மலர்ந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்க வேண்டும்.

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளும், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகளும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஒன்றிய, நகர, கிளைக்கழக வார்டு பகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.

இவ்வாறு கழக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசினார்.