தமிழகம்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை,

வரும் 23-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 20-ந்தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

நாளை 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்) வருமாறு:-

சின்னக்கல்லார் (கோவை) 7, புழல் (திருவள்ளூர்) 5, வால்பாறை தாலுகா ஆபீஸ் (கோவை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), எண்ணோர் (திருவள்ளூர்) தலா 4, நடுவட்டம் (நீல்கிரிஸ்) , சோழவரம் (திருவள்ளூர்)- பெரம்பூர் (சென்னை ),
வை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 3, அவலஞ்சே(நீல்கிரிஸ்), தேவலா (நீல்கிரிஸ்), உதகமண்டலம் (நீல்கிரிஸ்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) வால்பாறை (கோவை) , பூண்டி (திருவள்ளூர் ), ஆத்தூர் (சேலம்) , திருத்தணி (திருவள்ளூர்) தலா 2, தேக்கடி (தேனி), திருவள்ளூர் தலா 1.

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 23-ந்தேதி வரை கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வடக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.