தமிழகம்

மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எக்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் மற்ற மாவடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.