தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளால் தமிழகத்தில் மனிதமேம்பாடு குறியீடு உயர்வு – சி.பொன்னையன் பாராட்டு

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் சீரிய நடவடிக்கைகளால் தமிழகத்தில் மனித மேம்பாடு குறியீடு உயர்ந்துள்ளது என்று மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.

மக்களின் நல்வாழ்வில் மிகவும் முக்கியமான ஏற்றத்தாழ்வுகளின் பரிமாணங்களைப் புரிந்து கொள்வதற்கான சவால்கள் மற்றும் தடைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை உள்ளடக்கி சமத்துவ சார்பு கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி விவாதிப்பதற்காக “பொருளாதார வள உரிமைக்கான அணுகல் மற்றும் சமத்துவம் –சொத்து உரிமைகள், ஊதியங்கள் மற்றும் பரம்பரைச் சட்டங்கள்”என்ற தலைப்பின் கீழ் சிறப்பு கருத்தரங்கம் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் சென்னை, எழிலகத்தில் மாநில வளர்ச்சிக்கொள்கைக்குழுவின் காணொலி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுவின் உறுப்பினர் செயலர் அனில்மேஷ்ராம், டாக்டர் என். வெங்கடாச்சலம், வருவாய்த்துறை உயர்அலுவலர்கள், சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், டாக்டர் பிருந்தா பால்ராஜ், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் மற்றும் கள வல்லுநர்கள் எம்.விஜயபாஸ்கர், மற்றும் சங்கரராமன் ஆகியோர் கலந்து கொண்டு கருப்பொருள்களின் மீதான கொள்கை நடவடிக்கைகள், செயல்படுத்தக்கூடிய பரிந்துரைகள், உரிய தீர்வுகள், பிற மாநிலங்களால் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் போன்ற செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

இதில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் பேசியதாவது:-

மிகுந்த பசி, நீங்காத நோய், அழிவு தரும் பகை இன்றி வாழும் உரிமை ஒவ்வொரு குடிமக்களுக்கும் உள்ளதென்றும் அதன்வழி தம் குடிமக்களைக் காத்தல் அரசின் கடமை என்றும் திருவள்ளுவர் கூறியதை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளார். அதன் வழியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்த தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023, உள்ளடக்கிய வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியின் மிகை விகிதத்துடன் தொலை நோக்குப்பார்வை 2023, குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு கணிசமான வளங்களை வழங்குவதன் மூலம் தமிழகம் வறுமையில்லாத மாநிலமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான முக்கியத்துவம் அளிக்கிறது.

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியில், இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. 1994ம் ஆண்டு முதல் மாநிலத்தில் வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. 2011-12ம் ஆண்டின் படி வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் சதவீதம் கிராமப்புறங்களில் 15.83 சதவீதமும் நகர்ப்புறங்களில் 6.54 சதவீதம் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சராசரிவீதம் 11.28 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டின் படி மாவட்டம் வாரியான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த வருமானம் கொண்ட மாவட்டங்களான பெரம்பலூர் (ரூ.4,13,354 லட்சம்), அரியலூர் (ரூ.7,62,004 லட்சம்), திருவாரூர் (ரூ.8,59,491 லட்சம்) ஆகிய மாவட்டங்களின் வருமானம், உயர் வருமானம் கொண்ட மாவட்டங்களான திருவள்ளூர் (ரூ.1,03,28,268 லட்சம்), சென்னை (ரூ.91,21,776 லட்சம்) வருமானத்தில் பத்தில் ஒரு மடங்காக மட்டுமே உள்ளது. அதேபோல் குறைந்த தனி நபர் வருமானம் கொண்ட மாவட்டங்களான திருவாரூர் (ரூ.0.60 லட்சம்) மற்றும் பெரம்பலூர் (ரூ.0.64 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாவட்டங்களின் தனி நபர் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.

1990 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய மாநிலங்களுக்கான கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரத்தின் மூன்று பரிமாணங்களின் சராசரி விகிதம், துணை தேசிய மனித மேம்பாட்டுக் குறியீட்டின் படி தமிழ்நாடு, கேரளா, அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மனித மேம்பாட்டு குறியீட்டில் உயர்ந்த அளவில் உள்ளன. அவ்வறிக்கையின்படி 1990ம் ஆண்டில் 0.471 ஆக இருந்த தமிழகத்திற்கான மனிதவள மேம்பாட்டுக் குறியீடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் சீரிய நடவடிக்கைகளால் 2018ம் ஆண்டில் மனித மேம்பாடு குறியீடு 0.708 ஆக உயர்ந்துள்ளது.

ஆயினும் மாவட்ட அளவிலான மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் ஏற்றத்தாழ்வுடன் கன்னியாகுமரி மாவட்டம் மிக உயர்ந்த குறியீட்டுடன் (0.944) ஆகவும், அரியலூர் மாவட்டம் மிகக்குறைந்த குறியீட்டுடன் (0.282) காணப்படுகின்றது. பாலின விகிதத்திலும் மாவட்ட அளவில் வேறுபாடு காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மட்டங்களில் உள்ள சமனற்ற நிலையை குறைக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்தும் முதல்வர் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.