தற்போதைய செய்திகள்

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட கழகம் ஏற்பாடு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

தூத்துக்குடி

வருகிற 22-ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட கழகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 22-ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைக்கிறார். பின்னர் புதிய திட்டப்பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:-

தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு அம்மாவின் நல்லாட்சியை வழிநடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் சென்னை மாநகரத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களுக்கும் உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு அமைச்சர் என பல்வேறு குழுக்களை நியமித்து அவர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் காரணமாக தற்போது சென்னை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கேற்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு இறப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் இல்லை. தொடர்ந்து இந்நிலை நீடிக்க சிறப்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 22-ம்தேதி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தூத்துக்குடி மாவட்ட கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.