தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

சென்னை

நமது தாய் திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி, வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று சுதந்திர தின வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள சுதந்திர திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள் காட்டிய அகிம்சை வழியில், ஆங்கிலேயர்களிடமிருந்து நம் தாய் திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்திட தங்கள் இன்னுயிரை நீத்த பல்லாயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தைப் போற்றும் நன்னாளாகவும் இச்சுதந்திரத்தினம் விளங்குகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை போற்றி பெருமைப்படுத்தும் வகையில், விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 15,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையிலும், தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையிலும் நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவுத் தூண்கள் நிறுவி, அவர்களின் பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் விழாக்கள் நடத்தி, அவர்களின் புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் இக்காலக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகம், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவிகிதமும் அதிகம். அதுமட்டுமின்றி உயிர் இழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு.

கொரோனா தொற்று பரவலை தடுத்திட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலும், தமிழக மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில், பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களை அம்மாவுடைய அரசு காத்து வருகிறது. மக்களின் முழு ஒத்துழைப்போடு, கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு, மீண்டும் வெற்றி நடைபோடும் என்பதில் ஐயமில்லை.

இந்த இனிய நாளில், நமது தாய் திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி, வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சுதந்திர திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.