தற்போதைய செய்திகள்

முதலமைச்சர்- துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா – தமிழகத்தில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு

மதுரை

அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்து சாதனை படைத்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மதுரையில் மாவட்ட தொழில் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கொரோனா ெதாற்று காலத்திலும் பாரத பிரதமரே பாராட்டும் வகையில் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாது கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிகப்படியான தொழில் முதலீடுகளை ஈர்த்து பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் கொடுத்த தமிழக முதலமைச்சர், அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள், தொழில் துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், சிறு குறு தொழில்துறை அமைச்சர் ஆகியோருக்கு மதுரை மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கும் மாபெரும் விழா மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை பாலு வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மடிசீயா தலைவர் முருகானந்தம், ரோட்டரி ஆளுநர் ஜெயக்கண், கப்பலூர் தொழில்பேட்டை தலைவர் ரகுநாத ராஜா, அரிமா முன்னாள் ஆளுநர் ராமசாமி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி, உரிமையாளர்கள் வசுதாரா, குடியிருப்போர் வசுதாரா உரிமையாளர் நலச்சங்க செயலாளர் விவேகானந்தன், தாம்ப்ராஸ் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா சென்னையில் முதன்முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன்மூலம் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்து தந்தார். அதனைத்தொடர்ந்து அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆண்டு இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சம் கோடி அளவில் தொழில் முதலீட்டை ஈர்த்து தந்தார். இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்து தந்தார்.

மேலும் கொரோனா காலத்திலும் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் எந்த நாடும் செய்யாத வகையில் நமது முதலமைச்சர் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து அதன் மூலம் ரூ.40,718 கோடி அளவில் முதலீட்டை ஈர்த்து 74,212 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதி நிதி ஆயோக் அமைப்பு, இந்திய கடலோர மாநிலங்களில் ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து அம்சங்களிலும் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது என்று தனது ஆய்வில் கூறியுள்ளது.

தென் மாவட்டங்களில் முதலமைச்சர் அதிக தொழிற்சாலைகள் வர வேண்டும் என்று ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்தார். அதில் தென் மாவட்டங்களில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்க வந்தால் நிலத்தின் மதிப்பில் பாதி அளவு மானியமாக வழங்கப்படும் என்றும், தொழில்களுக்கும் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16 சதவீதமாக உள்ளது. அதுமட்டுமல்லாது கணினி மின்னணுவியல் ஒலி, ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 5 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மாநில மொத்த உற்பத்தியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய முதலமைச்சர் ரூ.200 கோடியை நிவாரணமாக வழங்கினார். அதற்கு துணை முதலமைச்சர் துணையாக இருந்து வருகிறார். இந்திய அளவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்களிலம் தமிழகம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா, மற்றும் குஜராத் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதலமைச்சர் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட வங்கிகளுக்கான கூட்டங்கள் நடைபெற்றதில் ரூ.7000 கோடி அளவில் மத்திய அரசின் கடன் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஒப்புதல் பெற்று இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தொடர்ந்து முதலமைச்சர் தமிழகத்தில் தொழில் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக முதலமைச்சர் உயர்த்தி சாதனை படைத்து உள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார். கொரோனா காலத்திற்கு முன்பு வேலையின்மை 8.3 சதவீதமாக இருந்தது. தற்போது 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலமைச்சர் ஒரு சகாப்தம் படைத்து வருகிறார். சமீபத்தில் கூட அமெரிக்கா சிலிகானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சார்பில் சமீபத்தில் 61 நாடுகள் பங்கேற்ற காணொளி காட்சி மாநாட்டில் 4500 தொழில் மூதலீட்டாளர்கள் பங்கேற்றனர். சென்னையில் இருந்தபடி நமது முதல்வர் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். நானும் மதுரையிலிருந்து பங்கேற்றேன். அதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பதாக கூறினர்.

இன்றைக்கு அம்மா அரசால் வழங்கப்பட்டு வரும் மடிகணினி திட்டம் மூலம் 65 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். பாரத் நெட் மூலம் 12,525 கிராமங்களுக்கு அதிவேக பைபர் ஆப்டிகல் மூலம் இணைய வசதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தமிழக கிராமங்கள் சாட்டிலைட் கிராமங்களாக உருவாகும். அதேபோல் புகழ்பெற்ற ஜோகோ நிறுவனத்தின் கிளைகளை தமிழகத்தில் உருவாக்க முதலமைச்சர் முயற்சி எடுத்து வருகிறார். அப்படி வந்தால் இளைஞர்கள் யாரும் அமெரிக்கா செல்ல வேண்டாம். அவர்கள் கிராமத்திலிருந்தபடியே தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்ளலாம்.அம்மாவிற்கு ஈடு இணையானவர் யாரும் இல்லை. அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றும் முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார்.

தமிழகத்தில் இப்படி நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளி விபரங்களை கொடுத்தும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார். அவருக்கு உண்மை அறிக்கையை இங்கு பேசியவர்கள் தங்கள் பேச்சின் மூலம் வழங்கியுள்ளனர். எளிய, சாமானிய, சரித்திர முதல்வராக நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திலும் ரூ.40,718 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. ஸ்டாலினுக்கு வெள்ளை உள்ளம் இல்லாததால் வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் மனதில் ஒரு சொட்டு ஈரம் கூட கிடையாது. அம்மாவின் ஆட்சியில் சிங்கிள் விண்டோ சிஸ்டம். திமுக ஆட்சியில் மல்டி விண்டோ சிஸ்டம் இருந்தது.

கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் கொடுக்கப்படும் என அறிவித்த ஒரே முதல்வர் நமது முதலமைச்சர் தான். திமுக கலந்தாய்வு கூட்டம் ஒரு செட்டப் கூட்டம் ஆகும். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை இன்னும் ஈர்க்க நடவடிக்கை எடுத்து தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தென் தமிழகம் தொழில் வளர்ச்சி பெறும். அம்மா அரசின் செயல்பாடுகளை ஸ்டாலின் மக்களிடம் திசை திருப்பி பேசி வருகிறார்.

அம்மா அரசு அறிவித்த எல்லா நலத்திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. ஒரு மாநிலம் நன்றாக செயல்பட்டால் தான் முதலீடுகளை ஈர்க்க முடியும். தொழில் முதலீடுகளுக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். எளிய முதல்வராக நமது முதல்வர் செயல்படுவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 2021-ல் தமிழகத்தை முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி வழி நடத்துவார். அப்போது இது போன்று பல்வேறு சாதனைகளை செய்வார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.