சிறப்பு செய்திகள்

முதல்வரின் உத்தரவுப்படி மேலும் 81 நடமாடும் மருத்துவ குழுக்கள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 14-

முதலமைச்சரின் ஆணையின்படி சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு மேலும் 81 விரைவு நடமாடும் மருத்துவக்குழுக்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

அம்மாவின் அரசு, முதலமைச்சர் தலைமையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கட்டமைப்புகள், உபகரணங்கள், மனிதவளம், மருந்து மாத்திரைகள், தற்காப்பு உடைகள் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடு இல்லாமல் போதிய அளவில் கொள்முதல் செய்து கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைப் பணிகளை மிகச்சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் சென்னை மாநகராட்சியில் சில மண்டலங்களிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் இருந்து வருகிறது.பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 726 அலுவலர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன.

இதனைத்தவிர 80 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறையின் 33 நடமாடும் மருத்துவ வாகனங்கள், 30 ஆர்.பி.எஸ்.கே. வாகனங்கள், 20 ஜெ.எஸ்.எஸ்.கே. வாகனங்கள் உட்பட 173 வாகனங்கள் ஏற்கனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டும் வகையில் சென்னை மாநகராட்சியில் 61 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 குழுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 குழுக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குழுக்களும் என மொத்தம் 81 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு கூடுதலாக ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறியும் பணிகளையும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கே சென்று நோய் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதன்மூலம் சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியும் பணிகள் மற்றும் தனிமைப்படுத்தபட்ட நபர்களை கண்காணிப்பு பணிகளும் தீவிரமாக்கப்பட்டு கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவப்பணிகள் இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொ