தற்போதைய செய்திகள்

முதல்வர்- துணை முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

விருதுநகர்

வரும் தேர்தலுக்கான அரசியல் வியூகங்களை வகுக்கும் வகையில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எடுக்கும் முடிவுகளுக்கு அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள் என்று திருவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

திருவில்லிபுத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைய வேண்டும் என்பது திருவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் நூறு ஆண்டுகள் கனவாகும். விவசாயிகள், பட்டாசு தொழிலாளர்கள், நெசவு தொழிலாளர்கள் என உழைக்கின்ற மக்கள் வாழ்கின்ற பகுதி இந்த சட்டமன்றத் தொகுதியாகும். இங்கு அரசு கலைக்கல்லூரி வேண்டுமென்று இந்த தொகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அதை நிறைவேற்றியது அம்மாவுடைய அரசு, எடப்பாடியார் அரசு தான்.

திருவில்லிபுத்தூர் தொகுதி மக்களின் இரண்டு கோரிக்கை முக்கியமானதாகும். வத்திராயிருப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். திருவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதாகும். இந்த இரண்டு கோரிக்கையையும் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வந்துள்ளார். அந்த இரண்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி பல்கலைக்கழக அளவிற்கு தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது மூலம் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவு நிறைவேறும். 1500 ரூபாய் ஆண்டு கட்டணத்தில் இந்த கல்லூரியில் ஏழை எளிய மாணவர்கள் படிக்கலாம். 5 பிரிவுகளுடன் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் பிரிவுகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் மசோதா சட்டத்தில் தமிழக முதல்வர் மீது குறை கூற ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் என்பதே தமிழ் பெயர் கிடையாது. ஸ்டாலின் என்பது ரஷ்ய அதிபரின் பெயர் ஆகும். ஸ்டாலின் பேர் கொண்ட இவர் தமிழக முதல்வரை விமர்சிக்க தகுதி கிடையாது. வேளாண் மசோதாவில் தவறு இருந்தால் தமிழக முதல்வர் கண்டிப்பாக சுட்டிக் காண்பிப்பார். முதல்வர் எதைச்செய்தாலும் குறை சொல்வதையே ஸ்டாலின் குறிக்கோளாக வைத்துள்ளார். மத்திய அரசையும் மாநில அரசையும் குறை சொல்லியே பிழைப்பு நடத்தும் ஸ்டாலின் அரசியல் கனவு பலிக்காது. தமிழகத்தி்ல் இருமொழிக் கொள்கையில் முதல்வர் எடப்பாடியார் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு. கூட்டணி என்பது துண்டு போன்றது கொள்கை என்பது வேட்டி போன்றது. துண்டைத் தேவைப்பட்டால் தோளில் போடுவோம். இல்லையென்றால் ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவோம். இது அண்ணாவின் கொள்கையாகும். அரசியல் குறித்து தமிழக முதல்வரும், துணை முதல்வரும் எடுக்கும் முடிவுகளுக்கு அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்.

அடுத்து வரும் தேர்தலுக்கான அரசியல் வியூகங்களை வகுக்கும் வகையில் முதல்வரும். துணை முதல்வரும் இணைந்து முடிவு எடுப்பார்கள். ஐந்து முறை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை. விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

அதிமுக ஆட்சியில் தான் விருதுநகரில் மருத்துவ கல்லூரி, திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டையில் அரசு கலை கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் விரைவில் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழிலை பாதுகாக்க28 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாக குறைக்க பாடுபட்டது அதிமுக ஆட்சியில்தான். தீப்பெட்டி தொழில் அழிந்த போகும் என்று சொன்னார்கள். தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவிகித வரியை 12 சதவிகிதமாக குறைத்தது அதிமுக ஆட்சியில்தான். இதன் மூலம் 6 மாவட்டத்தில் நடைபெறும் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது எடப்பாடியார் ஆட்சிதான்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

பேட்டியின்போது, சந்திரபிரபா முத்தையா எம்.எல்.ஏ, வத்ராப் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்து முருகன், கழக ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, முத்தையா, மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், வத்ராப் ஒன்றிய கழக செயலாளர்கள் சேதுராமன், சுப்புராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.