தற்போதைய செய்திகள்

முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

திருச்சி

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற எங்கள் மீது பழிபோடும் தி.மு.க. முரண்பாட்டின் மொத்த உருவம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள பொய் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவின்படி திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். நேற்று 5-வது முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க ஆட்சியில் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கூறியிருக்கிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது கட்சிகளின் கடமை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை, திட்டங்களை ஒன்று விடாமல் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். உதாரணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். இது ஒரு மகத்தான திட்டம். அதேபோல், மானிய விலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம்.

இதெல்லாம் தேர்தல் அறிக்கையிலேயே இல்லை. ஆனால், நாங்கள் இத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒரு திட்டத்தை கூட மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிறைவேற்றி தந்தார். இதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதற்காக பழியை எங்கள் மீது சுமத்துகிறார்கள்.

நாங்கள் எந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. மாணவர்களுக்கு மடிகணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி, பள்ளி குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள். இதுபோல, பல்வேறு திட்டங்களை அந்ததந்த காலகட்டத்தில் நிறைவேற்றியுள்ளோம்.

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இன்றுவரை கொடுக்கப்படவில்லை. இதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்படும் என்று சொன்னார்கள் அதையும் குறைக்கவில்லை. பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னார்கள். மற்ற மாநிலங்களில் கூட குறைத்திருக்கிறார்கள்.

ஆனால், இவர்கள் இன்னும் குறைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல்- டீசல் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். இதுவரை கொண்டு வந்தார்களா? இதே நிதியமைச்சர் என்ன சொன்னார். பெட்ரோல்- டீசல் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரக்கூடாது என்று சொன்னார்.

ஆனால், டி.ஆர்.பாலு “நாங்கள் கட்சி ரீதியாக சொல்கிறோம். அவர் (நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்) ஆட்சி ரீதியாக சொல்கிறார்” என்கிறார். இப்படி தி.மு.க. கட்சி ஒன்று சொல்கிறது, தி.மு.க. ஆட்சி ஒன்று சொல்கிறது. இந்த மாறுபட்ட, முரண்பாடான கருத்துக்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க முரண்பாட்டின் மொத்த உருவமாக செயல்படுகிறது.

அதேபோல், தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுக்கப்படவில்லை. அதை நாங்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பும் போது இரண்டு ஏக்கர் நிலம் கடலில் தான் இருக்கிறது என்று கிண்டலாக பதில் சொன்னார்கள். எனவே, தி.மு.கவின் பொய்யான வாக்குறுதிகளை எங்களால் பட்டியலிட முடியும்.

எனவே மக்களை ஏமாற்றுகின்ற ஒரு அரசாங்கம் தான் தமிழகத்தை தற்பொழுது ஆண்டு கொண்டிருக்கிறது. இதை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். முதியோர் உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார்கள்.

அதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் மாவட்டந்தோறும் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று நடவடிக்கை எடுத்து வெளிப்படுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை எத்தனை மனுக்கள் பெறப்பட்டது. எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்று இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதேபோல் பஞ்சாயத்து வாரியாக, தொகுதி வாரியாக ஒரு கார்டு கொடுப்போம் என்று சொன்னார்கள். அந்த கார்டை எடுத்துக் கொண்டு நேராக எனது ரூமுக்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று சொன்னார்கள். எத்தனை பேர் ரூமுக்கு சென்று சந்தித்தார்கள். எனவே தேர்தல் நேரத்தில் பசப்பு வார்த்தைகளை, ஆசை வார்த்தைகளை, மோசடியான வார்த்தைகளை கூறிய தி.மு.க.வினர் ஒரு தற்காலிக வெற்றியை பெற்றுள்ளார்கள்.

அவர்களுக்கும், எங்களுக்கும் வெறும் 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம். எனவே, 2026-ம் ஆண்டு அவர்களை காட்டிலும் நாங்கள் 10 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் மகத்தான புரட்சித்தலைவர் ஆட்சி மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை அமைப்போம். அதற்கு முன்னதாக வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளரும், மாநராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.