சிறப்பு செய்திகள்

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, துணை குழுவை கலைக்க வேண்டாம் – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவை கலைக்கக்கோரி கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஜோசப், ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோள் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு துணைக் குழுவை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதான குழு இந்த விவகாரத்தில் எடுக்கும் அனைத்து முடிவுகளின் அடிப்படையில் தான் துணைக்குழு முறையாக செயல்படுகிறது. அதனால் முல்லைப் பெரியாறு அணை குழுவை கலைக்க வேண்டாம். உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் தான் பிரதான குழுவும் செயல்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் பலமாக உள்ளது. அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மேற்பார்வை குழு கண்காணித்து வருகிறது. மேற்பார்வை குழு தனது பணியை முழுமையாக துணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனெனில் துணைக்குழு ஒரு உதவிக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என மத்திய நீர்வள ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. ஏனெனில் அணை எத்தனை ஆண்டுகள் பழமையானது என பார்க்கக்கூடாது. ஏனெனில் அது முறையாக பராமரிக்கப்படும் வரை அணை பலமாக இருக்கும். முல்லைப் பெரியாறு அணையை விட பழமையான அணைகள் உலகின் பல நாடுகளில் செயல்பாட்டில் உள்ளன.

கேரள வெள்ளப்பெருக்கின்போது அணை திடீரென முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்டதாக கூறுவது தவறு. நீர் அரை அடி அதிகரிக்கும் போதெல்லாம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. நீர் திறப்பு அதிகரிக்கும்போதும் தகவல் பரிமாறப்பட்டது.
கேரளாவில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டபோது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியாக இருந்தது.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.