சிறப்பு செய்திகள்

முஹம்மத் ஜான் எம்.பி. மரணம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரங்கல்

சென்னை

கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான முஹம்மத் ஜான் எம்.பி. மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.முஹம்மத் ஜான் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

ஆரம்பகால கழக உடன்பிறப்பு முஹம்மத் ஜான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு ராணிப்பேட்டை நகர கழகச் செயலாளர், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அன்புச் சகோதரர் முஹம்மத் ஜானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.