தமிழகம்

மூன்றில் ஒரு பங்கு கிராமங்களில் மார்ச்சுக்குள் பாரத் நெட் திட்டம்-பேரவையில் ஆளுநர் உரை

சென்னை

மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் மார்ச் மாதம் 30 ம் தேதிக்குள் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையின் கூட்டத்தொடரை நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து உரையாற்றியதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஒரு சிறந்த நீண்டகாலக் கடன் வழங்கும்

நிறுவனமாகத் திகழ்வதற்கும், அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும், இதுவரை நிறுவனக் கடன் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுகின்ற வகையில், தமிழ்நாடு அரசு, இக்கழகத்தில், 1,000 கோடி ரூபாயை மூன்று வருடங்களில் முதலீடு செய்யும்.தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதற்காக, 2020-ம் ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் தங்க விருதினை

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து, தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. பின்தள கணினிமயமாக்கல் முறையில், மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புத் திட்டம்’ உட்பட, பெரிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மின்னாளுமை கட்டமைப்பிற்குள் முன்னணி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதை ‘தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை’ நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கட்டமைப்பின் மூலம் பல்வேறு அரசு சேவைகள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்றதொரு மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதே, ‘தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறைசார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கையின்’ குறிக்கோளாகும். அண்மையில் வெளியிடப்பட்ட ‘இணையப் பாதுகாப்புக் கொள்கை’ மூலம், தரவுகளின் உயர்தரப் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள்ளும், எஞ்சிய கிராமங்களில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள்ளும் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிவேக மற்றும் அளவிடத்தக்க அலைவரிசையை வழங்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநிலப் பெரும்பரப்பு வலையமைப்பு, தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு உட்கட்டமைப்புடன் பாரத்நெட்டை இணைப்பதன் மூலம், ஒரு ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோக தளமான ‘ஒருங்கிணைந்த மின்னணு உட்கட்டமைப்பு’ ஏற்படுத்தப்படும்.

அனைத்து நுகர்வோருக்கும் தரமான, நம்பகத்தன்மை வாய்ந்த மின்சாரத்தை வழங்குவது தமிழ்நாடு உட்கட்டமைப்பின் ஒரு அடிப்படைக் கூறாகும். தமிழ்நாடு ஒரு மின் மிகை மாநிலமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில்,

32,149 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறனை அடைவதற்கு, 15,745 மெகாவாட் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில், 16,166 மெகாவாட் மின்சாரம், நீர் மின்சக்தி உட்பட, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆற்றலாகும். நம்பகமான மின்சக்தி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு, தொடரமைப்பு மற்றும் பகிர்மான வலையமைப்பின் கொள்திறனை மேம்படுத்துவதற்காக, பெருமளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.