தற்போதைய செய்திகள்

மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடத்த முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு – பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

சென்னை

மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டி நடத்த முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது விருத்தாசலம் தொகுதி உறுப்பினர் கலைச்செல்வன் விருத்தாசலத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தி நடைபாதை அமைக்க அரசு அவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இதுதொடர்பாக சாத்திய கூறு இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.

உணவு, எண்ணம், உடற்பயிற்சி இந்த மூன்று நல்ல நிலையில் இருந்தால்தான், நீண்ட நாள் வாழ முடியும் என்பதால், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களிடன் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே இத்தகைய திட்டம் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

இதனை தொடர்ந்து உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சென்னை மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வந்தன. அதில் வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் வந்து பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மெரினாவில் மாரத்தான் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 13 கிலோ மீட்டர் கடற்கரையின் அழகை கண்டுகளிக்க முடியாமல் போகிறது. எனவே மாரத்தான் போட்டிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்றார்.

இதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மாரத்தான் போட்டிகள் நடத்தவும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகளை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.