திருச்சி

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டாமல் தடுக்க வேண்டும்-தமிழக அரசுக்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் வலியுறுத்தல்

திருச்சி, ஜூலை 20-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் வலியுறுத்தி உள்ளது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் எம்.தங்கவேல் தலைமை வகித்தார்.

மாவட்ட கழக இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.இந்திராகாந்தி, மாவட்ட கழக துணை செயலாளர் சமயபுரம் டி.சின்னையன், மாவட்ட கழக முன்னாள் செயலாளர் சுப்பு (எ) பே.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

காவேரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய பெருமை கழகத்திற்கு உண்டு. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக மாநிலம் மதிக்காதபோது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோது உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவேரி மேலாண்மை வாரியமும், காவேரி ஒழுங்காற்று குழுவும் அமைத்தார்.

2014-ம் ஆண்டு கர்நாடக அரசு மேகதாதுவில் காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சித்தபோது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் ‘ மேகதாது அணை கட்டக்கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றி 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மேகதாது அணை கட்டுவதை தடுத்தார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அரசும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அரசும் செயல்பட்டது போல் சட்டப்போராட்டங்களையும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து கர்நாடக அரசு மேகதாது அணை கட்டாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது,

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைத்து தேர்தல் பணியை சிறப்பாக ஆற்றுவது. கழகத்தின் பொன்விழாவையொட்டி தலைமைக்கழகம் அறிவிக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பாக நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.