தமிழகம் தற்போதைய செய்திகள்

மேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, டாக்டர்கள் சாதனைகள் படைக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை

மேலைநாடுகளை மிஞ்சும் வகையில் உயிர்காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து,சாதனைகள் படைக்க வேண்டும் என்று மருத்துவர்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

சென்னை வடபழனியில் Fortis Health Care நிறுவனத்தின் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது அம்மாவின் கொள்கையாகும். 2010-2011-ம் ஆண்டில் 1,945 ஆக இருந்த மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள், தற்போது 3,400 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, அம்மாவின் அரசு, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அவை அனைத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுத்த அரசு அம்மாவின் அரசு.அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவினை மெய்ப்பிக்கும் வகையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அம்மாவின் அரசு சட்டம் இயற்றியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக இன்றையதினம் விளங்கி வருகிறது.

மருத்துவம் நுண் கலையாகும். அது வணிகமன்று. ஒரு சேர இதயமும் மூளையும் ஒருமித்து பணியாற்றும் உன்னதமான பணியே மருத்துவமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் மருத்துவமனையை நாடி வரும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகி, அவர்களுக்கு உயரிய மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று அன்போடு இந்த நிறுவனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றேன்.

இறைவன் எப்படி தன்னை நாடி வரும் மக்களிடம், வித்தியாசம் ஏதும் பாராமல், அவர்களின் குறையைத் தீர்க்கின்றானோ, அதேபோல் மருத்துவர்களும், தங்களை நாடி வரும் நோயாளிகளிடம் வித்தியாசம் ஏதும் பாராமல் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்கி, அவர்களது நோயைக் குணப்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நிறுவனம் இருதய மாற்று சிகிச்சையினை அதிக அளவில் செய்து வருவதாக அறிகிறேன். நம்மிடையே பணியாற்றும் மருத்துவர்கள் மிகுந்த திறமையானவர்கள். சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்களின் திறமைகளை நன்கு பயன்படுத்தி, மருத்துவத் துறையில், மேலைநாடுகளை மிஞ்சும் வகையில், உயிர்காக்கும் உயரிய சிகிச்சைகள் செய்து, சாதனைகள் படைக்க வேண்டும் என்று அன்போடு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.